You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியா முன்னாள் பிரதமர் மகாதீர்: காஷ்மீர் குறித்த எனது கருத்துகளால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டது
காஷ்மீர் பிரச்சினை குறித்து தாம் தெரிவித்த கருத்துகளே இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்படக் காரணம் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.
மற்றபடி தமது தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவுடன், மலேசியா நல்ல உறவைப் பேணி வந்ததாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தனது 93ஆவது வயதில் மலேசியாவின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார் மகாதீர். இதையடுத்து காஷ்மீர் பிரச்சினை, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியத் தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.
மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பில் இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தவும் மலேசியா ஒப்புக்கொள்ளவில்லை.
இந்தியாவில் ஜாகிர் நாயக்கிற்குப் போதிய பாதுகாப்பு இருக்காது என மகாதீர் தெரிவித்த மற்றொரு கருத்தாலும் இந்திய- மலேசிய உறவில் விரிசல் ஏற்பட்டது.
தற்போது பிரதமர் பதவியிலிருந்து விலகி, புதுக்கட்சியும் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவைச் சேர்ந்த WION என்ற ஆங்கில ஊடகத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் காஷ்மீர் பிரச்சினை, ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து மீண்டும் மனம் திறந்துள்ளார் மகாதீர்.
"மலேசியாவைச் சேர்ந்த ஏராளமான இந்திய வம்சாவளியினருக்கு இன்றளவும் இந்தியாவுடன் தொடர்புகள் உள்ளன. இந்தியா- மலேசியா இடையேயான உறவில் சிறு குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை உடனுக்குடன் கடந்து வந்திருக்கிறோம்.
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் எனக்கு நல்ல உறவு இருந்து வந்துள்ளது. நான் இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்றதும் எனக்கு உடனுக்குடன் வாழ்த்து தெரிவித்த பிற நாட்டுப் பிரதமர்களில் மோதியும் ஒருவர்.
"நாங்கள் இருவரும் பல காலம் முன்பே சந்தித்திருக்கிறோம். ஆனால், அந்தச் சந்திப்புக் குறித்து நான் மறந்துவிட்டேன். எனினும் மோதி பிரதமராவதற்கு முன் எப்போதோ நாங்கள் சந்தித்ததை நினைவுகூர்ந்து, இருவரும் உள்ள ஒரு புகைப்படத்தை என்னிடம் காண்பித்தார் மோதி. இந்தியாவில் யார் பிரதமராக இருந்தாலும் அந்நாட்டுடன் நல்லுறவைப் பேணவேண்டும் என்பதே மலேசியாவின் விருப்பம்," என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து மட்டும் தாம் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், உலகளவில் சில தவறுகள் நடக்கும்போது அவை குறித்தும் தாம் பேசியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இவ்வாறு பேசுவதால் பாகிஸ்தானை ஆதரிப்பதாக ஆகிவிடாது. இது காஷ்மீர் மக்கள் குறித்த விஷயம். அம்மக்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். எனினும் தற்போது இந்தியாவின் கீழ் உள்ளனர். பிரிவினையின்போது செய்துகொள்ளப்பட்ட தொடக்கநிலை ஒப்பந்தத்தின்படி எதுவும் நடக்கவில்லை," என்று மகாதீர் கூறியுள்ளார்.
"இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் நிலை குறித்து மட்டும் கவலை தெரிவிக்கும் நீங்கள், சீனாவில் உள்ள உய்குர் சிறுபான்மை இஸ்லாமியர்கள் குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை?" என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, "சீனா - இந்தியா ஆகிய இரு நாடுகளுடனான மலேசியாவின் உறவு ஒரே மாதிரியானதல்ல," என்று பதிலளித்துள்ளார்.
"இந்தியா தன்னைப் பற்றி விமர்சனங்களை ஏற்கும். ஆனால், சீனா அப்படியல்ல. அந்நாடு மாறுபட்ட அமைப்பும் மாறுபட்ட பார்வையும் கொண்டுள்ள நாடு.
"சீனா விமர்சனங்களை ஏற்காது என்பது உங்களுக்கும் தெரியும். சீனாவுடன் நாங்கள் போர் புரிய முடியாது. எனவே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டியுள்ளது," என்று மகாதீர் மேலும் விளக்கம் அளித்துள்ளார்.
மதபோதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்த மலேசியா விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஜாகிர் நாயக்கின் வருகையை இந்தியாவில் யாரும் வரவேற்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
"எனவே, தற்போதைய சூழலில் ஜாகிரி நாயக் மலேசியாவிலேயே தங்கியிருக்கட்டும் என நினைத்தோம். எனினும் அவரை வேறொரு நாட்டுக்கு அனுப்ப விரும்புகிறோம். அந்த நாடு அவருக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
"இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு இடையேயான உறவு அவ்வளவு நன்றாக இல்லை. அங்கு விசாரணையின்றி பலர் கொல்லப்படுகின்றனர். இந்திய அரசு ஒருபக்கம் இருக்கட்டும், அங்குள்ள மக்கள் வேறு எண்ணங்களைக் கொண்டுள்ளனர். சில சமயங்களில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
"எனவே, இந்தியாவில் ஜாகிர் நாயக்கிற்கு பாதுகாப்பான சூழல் இருக்காது. எனினும் துரதிர்ஷ்ட வசமாக பல நாடுகள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை," என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை மீண்டும் மலேசியப் பிரதமராகப் பொறுப்பேற்றால் அப்போது ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு, "தற்போதைய சூழலில் இந்தியாவில் ஜாகிருக்குப் பாதுகாப்பு இருக்காது என்றே கருதுகிறோம். எனவே, அவர் பாதுகாப்பாக இருப்பார் என்று நாங்கள் உணரக்கூடிய ஒரு நாட்டிற்கு அனுப்பவேண்டும் என்றே விரும்புகிறோம்." என மகாதீர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- கேரளா விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு, 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்
- இலங்கையில் ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும்
- கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியவர்களின் சாட்சியங்கள்: "உருக்குலைந்த நம்பிக்கை, எதிர்காலம்"
- "சமூகப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்" - பத்ம பிரியா பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: