You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை மற்றும் பிற செய்திகள்
பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் ஒருவர், அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது நீதிமன்ற அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தான் முகமது நபி என்று கூறி வந்த அந்த நபர் மீது தெய்வ நிந்தனை வழக்கு தொடரப்பட்டு, அதன் விசாரணை பெஷாவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சுட்டுத்தள்ளப்பட்ட தஹிர் அஹ்மத் நசீமுக்கு எதிராக 2018ஆம் ஆண்டு பதின்வயது நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
புதன்கிழமை காலை நடந்து கொண்டிருந்த விசாரணையின்போது அவர் சுட்டுத் தள்ளப்பட்டார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது.
தஹிரை சுட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். சுட்டுத்தள்ளப்பட்டவர் "இஸ்லாத்தின் எதிரி" என்று அந்த நபர் கோபமாக கத்தும் காட்சிகள் மற்றொரு காணொளியில் பதிவாகி இருக்கிறது.
சுட்டுக்கொன்றவரின் பெயர் காலித் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அவர் துப்பாக்கியை கொண்டுவந்தார் என்பது தெரியவில்லை.
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் சட்டப்படி ஒருவருக்கு மரண தண்டனை அளிக்க முடியும். ஆனால், இதுவரை யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றாலும், ஏதேனும் ஒரு வன்முறை தாக்குதலுக்கு இது வழிவகுக்கும்.
புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனம் (PIB) இந்த கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் தமிழக ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகையில் உள்ள ஊழியர்கள் 38 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சுகாதாரத் துறையால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. இருந்தபோதும் அவர் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
விரிவாக படிக்க:கொரோனா வைரஸ்: தமிழக ஆளுநர் தனிமைப்படுத்திக்கொண்டார்
இந்தியாவில் 3-ம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
கொரோனா காரணமாக இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாதம் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. ஏற்கனவே அன்லாக் 1, 2 என்ற பெயர்களில் இரண்டு கட்டமாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாம் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேர் விடுதலை பற்றி முடிவெடுக்க தாமதம் ஏன்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டுமெனக் கோரி, அவருடைய தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஜூலை 22ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைத்த பிறகும் அது தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காதது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: