You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் சிகிச்சை: ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து மீண்டும் டிரம்ப் சர்ச்சை மற்றும் பிற செய்திகள்
ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து மீண்டும் டிரம்ப் சர்ச்சை
கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்காவின் மூத்த சுகாதார அதிகாரிகளை தெரிவித்த பின்னரும், அந்த மருந்து கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பயன்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் பயன்பாட்டை தாம் பரிந்துரைத்தால்தான் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் இருந்து இது நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"எதையாவது பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறினால், அது வேண்டாம் என்று சொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள்," என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த மருந்தை பயன்படுத்துவதால் தீவிர உடல்நல கோளாறுகள் உண்டாகும் என்பதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கோவிட்-19 சிகிச்சைக்காக அவசரமான சூழ்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் அந்த அமைப்பு ரத்து செய்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் பலனளிக்கிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அயோத்தி மசூதி குறித்து தெரியுமா?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதிநடக்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
கொரோனா வைரஸ் பரவும் நிலையையும் மீறி நடக்க உள்ள இந்த நிகழ்வில்இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகிஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாகப் படிக்க: அயோத்தி ராமர் கோயில் குறித்து தெரியும், புதிய மசூதி குறித்து தெரியுமா?
சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பைத் தொடர முடியாத மாணவி
பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் மேற்படிப்பைப் தொடர முடியாத சூழலில் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் பகுதிக்கு உள்பட்ட தி.பரங்கினி என்ற கிராமத்தில் வசித்துவரும் விவசாய கூலி தொழிலாளி முனியாண்டி என்பவரது மகள் தனலட்சுமி. பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இந்தப்பெண் 12ஆம் வகுப்பை நிறைவுசெய்து, தனது மேற்படிப்புக்காகக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு அவரது படிப்பைத் தொடர முடியவில்லை.
விரிவாகப் படிக்க: பழங்குடி இருளர்: சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பைத் தொடர முடியாத மாணவி
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீதான பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்ரபர்த்தி மீது புகார்
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்ரபர்த்தி மீது, சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தெரிவித்தது.
நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ள அவரது தோழி ரியா சக்ரபர்த்தி தூண்டியதாக சுஷாந்த் குடும்பத்தினர் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், சுஷாந்தை மன ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் ரியா மீது பீகார் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :