You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசியாவில் வீடியோ கேம் விளையாட்டாளர்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்பது தெரியுமா?
- எழுதியவர், ஜஸ்டின் ஹார்பர்
- பதவி, பிபிசி
வீடியோ கேம்கள் விளையாடுவதில் ஆசியாவில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீனா, இந்தியா, ஜப்பான் உள்பட ஆசியாவில் முக்கியமான சந்தைகளில் ஆண்களும் பெண்களும் சம அளவில் இதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டில் வீடியோ கேம் விளையாடும் பெண்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூகுள் நடத்திய ஒரு தகவல் சேகரிப்பில் தெரிய வந்துள்ளது.
வீடியோ கேம்களின் தலைமையிடமாக ஆசியா கருதப்படுகிறது. உலகில் வீடியோ கேம் விளையாடுபவர்களில் 48 சதவீதம் பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
``ஒவ்வொரு ஆண்டும் வீடியோ கேம் விளையாட்டுகளில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, இதில் அதிக பெண்கள் ஆர்வம் காட்டுவதுதான் காரணமாக உள்ளது'' என்று கூகுள் ஆசிய பசிபிக் பிராந்திய நிர்வாகி ரோஹிணி பூஷண் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை உயர்வுக்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. கதையம்சம் பிறரின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வதாக இருப்பதும், ஆசியாவில் இணைய வசதி நன்றாக இருப்பதும் இதற்கான காரணங்களில் அடங்கும்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
2019ஆம் ஆண்டில், வீடியோ கேம்களில் சேர்ந்துள்ள பெண்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியாவில் வீடியோ கேம் விளையாடுவோர் எண்ணிக்கை 1.33 பில்லியனாக உள்ளது.
இதில் 38 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர் என்று கூகுள் கூறியுள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நிக்கோ பார்ட்னர்ஸ் உடன் இணைந்து கூகுள் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
சீனாவில் இது 45 சதவீதமாகவும், தென்கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 40 சதவீதமாகவும் உள்ளது.
பணம் கொழிக்கும் துறை
கேம்கள் விளையாடுவோர் செல்போன்களைப் பயன்படுத்துவது இந்தப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேகமாக வளர்ந்திருக்கிறது.
``செல்போனில் விளையாடும்போது கேம்களில் கிடைக்கும் கேளிக்கை உணர்வு, தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறான விஷயங்கள் மற்றும் சுதந்திரம் போன்ற காரணங்களால் நிறைய பெண்கள் ஈர்க்கப்படுகின்றனர். குறிப்பாக ஆசியாவில் இதுதான் காரணங்களாக உள்ளன. ஆசியாவில் இணைய வசதியுள்ள முதன்மையான சாதனங்களாக செல்போன்கள் தான் இருக்கின்றன'' என்று கூகுள் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான செயலிகள், பங்களிப்புகள் மற்றும் களம் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் மேட் புரோக்லெஹர்ஸ்ட் கூறுகிறார்.
கேம்களை உருவாக்கும் EA மற்றும் Activision Blizzard போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, இணையவழி விளையாட்டு (e-sports) - போட்டிநிலை ஆன்லைன் கேம் துறையில் சிறந்த நிறுவனங்களுக்கும் வருவாயை ஈட்டித் தரும் கவர்ச்சிகரமான வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
முன்னணி பெண் இணையவழி விளையாட்டாளர்கள் ஸ்பான்சர்ஷிப், பரிசுத் தொகை மற்றும் பொருட்களை விளம்பரப்படுத்துதல் மூலம் 20 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளனர்.
ஆன்லைனில் நேரடியாக விளையாடும் அனுபவத்தை அளிப்பதுடன், மில்லியன் கணக்கானவர்களை பின்தொடரச் செய்யும் முக்கியமான செல்வாக்கு மிகுந்தவர்களாக அவர்கள் கருதப்படுகிறார்கள்.
ஆசியாவில் பெண்களை மட்டும் கேம் விளையாட்டாளர்களாகக் கொண்ட முழு அணிகள் மற்றும் லீக் விளையாட்டுகள் உலக அரங்கில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் Female Esports League -ம் அடங்கும். இணையவழி விளையாட்டில் பெண்கள் பங்கேற்பதை அதிகரிக்க உதவும் பிராந்திய அளவிலான விளையாட்டாக இது உள்ளது.
கடந்த ஆண்டில், இந்த லீக் போட்டிக்கு Signtel என்ற செல்போன் நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது.
``ஈடுபாட்டு சூழலை உருவாக்குவதற்கும், எல்லோரையும் ஒன்று சேரச் செய்வதற்கும், கேம் விளையாடும் தங்கள் பிடித்தமான பொழுதுபோக்கில் பங்கேற்பதற்கும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய தொழில்முறை வளர்ச்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். பெண் வீடியோ கேம் விளையாட்டாளர்களை மக்கள் அறியும்படி செய்ய ஆதரவு அளிக்கிறோம்'' என்று Signtel நிறுவனத்தின் நிர்வாகி சிண்டி டான் கூறியுள்ளார்.
25 வயதான அமந்தா லிம், தனது சகோதரருடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் தான் ஆன்லைன் வீடியோ கேம்களில் ஈடுபட்டார்.
``அப்போது கேம்களில் எனக்கு ஈர்ப்பு அதிகமானது. பெண் வீடியோ கேம் விளையாட்டாளர்கள் அதிகமாக பிரபலமாகவில்லை. ஆனால் எங்களில் நிறைய பேர் விளையாட வரும் அளவுக்கு காலம் மாறும் என்று நினைக்கிறேன். ஆண்களைப் போல நாங்களும் பலத்தை நிரூபிப்போம்'' என்று அவர் தெரிவித்தார்.
We.Baeters என்ற பெண்கள் மட்டும் பங்கேற்கும் அணியில் லிம் விளையாடுகிறார். இந்த அணி மலேசியா மற்றும் சிங்கப்பூர் முழுக்கப் பரவியுள்ளது.
`மக்கள் தொகை ரீதியிலான இலக்கு கிடையாது'
Battle Royale போன்ற கதாபாத்திரங்களாக பங்கேற்கும் வீடியோ கேம்களில், முன்னாள் தொழில்முறை விளையாட்டாளரான ரெய்யா அயுனன் தினமும் சுமார் ஆறு மணி நேரம் பங்கேற்றிருக்கிறார்.
பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகளில் இருந்து அவருடைய நேரடியான பங்கேற்பு நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் இருந்தனர்.
ஆன்லைனில் அதிக பெண் விளையாட்டாளர்கள் நேரடி ஒளிபரப்பில் இருப்பதை கவனித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
``தொழில்முறை விளையாட்டாளர்களுக்கு சமத்துவமான வாய்ப்பு அளிக்க சில லீக் பிரிவுகள் செயலாற்றினாலும், பெண்கள் மற்றும் மாணவிகள் வீடியோ கேம்கள் விளையாடுவதில்லை என்று சமூகம் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் கேமிங் துறையில் மக்கள் தொகை அடிப்படையில் எங்களை இலக்காக வைத்த திட்டங்கள் எதுவும் இல்லை'' என்று அவர் கூறினார்.
ஒரு தொழில்முறை கேம் பங்கேற்பாளராக அவர் ஒரு மாதத்துக்கு 4000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சம்) வரை சம்பாதித்திருக்கிறார். அதில் பெரும்பகுதி அவரை முன்னிறுத்தும் விளம்பரதாரர்கள் மூலம் கிடைத்தது. சமீபத்தில் அவரை Ubisoft என்ற வீடியோ கேம் நிறுவனம் பணிக்கு அமர்த்திக் கொண்டது. அதிக அளவில் பெண்களை ஈர்க்கும் வகையிலான கேம் விஷயங்களைத் தயாரிப்பதில் அந்த நிறுவனம் இப்போது ஈடுபட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவி வேலரி ஆங்கிற்கு 19 வயதாகிறது. அவர் தினமும் குறைந்தது 3 மணி நேரத்தில் இருந்து பல மணி நேரம் வரை வீடியோ கேம் விளையாடுகிறார். பள்ளிக்கூடத்தில் இருக்கிறாரா அல்லது தேர்வு விடுமுறையில் இருக்கிறாரா என்பதைப் பொருத்து இந்தக் கால அளவு மாறுபடுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சிறந்த தோழி தேசிய போட்டியில் பங்கேற்ற போது துணையாக சென்றபோது Call of Duty (CoD) விளையாடத் தொடங்கி இருக்கிறார். ``பெரும்பாலும் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த அந்த விளையாட்டில் என் தோழி மட்டுமே ஒரே பெண்ணாக இருந்தார். உண்மையில் அது தான் கண்களைத் திறந்தது'' என்கிறார் அவர்.
``என் தோழி அருமையாக விளையாடி, எதிர்த்து நின்ற பலரையும் தோற்கடித்ததைப் பார்க்க நன்றாக இருந்தது. பல போட்டிகளில் தன் அணிக்கு அவர் வெற்றி தேடித் தந்தார்'' என்றும் அவர் கூறினார்.
உலகெங்கும் இருந்து பங்கேற்பவர்களுடன் தாங்கள் விளையாட முடியும் என்பதால் சமூக அளவில் இது வேலரியிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ``மற்றவர்களுடன் ஆன்லைனில் நான் விளையாடுவது மிகுந்த கேளிக்கையாக இருக்கிறது. விளையாடும் போது ஒருவர் பற்றி ஒருவர் ஜோக் அடித்துக் கொள்வது நன்றாக இருக்கிறது'' என்று வேலரி குறிப்பிடுகிறார்.
துரதிருஷ்டவசமாக, பெண் விளையாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில் கெட்ட விஷயங்களும் உள்ளது. ஆன்லைனில் அவர்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர்.
``என்னைப் பற்றி மீம்ஸ்கள் போட்டனர். ஆன்லைனில் பாலியல் தொந்தரவுகளும் வந்தன. நீங்கள் பொதுவெளிக்கு வந்துவிட்டால், கவனிக்கப்படும் நபராக ஆகிவிட்டால், சிலருக்கு உங்களைப் பிடிக்காமல் போகலாம், உங்கள் மீது குற்றம், குறைகளை காண்பவர்கள் இருப்பார்கள். கேம்கள் பங்கேற்பு என்பது போதை நிலையை உருவாக்கக் கூடியது'' என்று அயுனன் கூறுகிறார்.
இதற்கான கணக்குகள் மற்றும் சுய விவரக் குறிப்புகளை முதலில் பதிவு செய்யும் போது, உங்களுடைய உண்மையான பெயர் அல்லது உங்களை அடையாளம் காட்டும் பெயர்கள் இல்லாத வகையில் பயனாளர் பெயரை (user name) தேர்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: