You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா - சீனா முற்றும் மோதல்: தூதரகத்தை மூட டிரம்ப் நிர்வாகம் உத்தரவு மற்றும் பிற செய்திகள்
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூட அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
இதனை "ஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு" என்று சீனா விவரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா "திருடுவதால்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை, வாஷிங்டனில் இருக்கும் சீனத் துணைத் தூதரகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
வணிகப் போர், கொரோனா தொற்று, ஹாங்காங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சீன ஆதரவு ஹேக்கர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை தயாரித்துவரும் ஆய்வகங்களை இலக்கு வைத்திருப்பதாக அமெரிக்காவின் நீதித்துறை குற்றம்சாட்டியது.
"அமெரிக்காவில் இருக்கும் மேலும் பல சீனத் தூதரகங்களை எப்போது வேண்டுமானாலும் மூட சொல்ல முடியும்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
நரேந்திர மோதி உரை: "இப்போது இந்தியா வாய்ப்புகளின் நிலம்"
கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் இந்தியா அமெரிக்கா உறவு தொடர்பான `இந்தியா ஐடியாஸ்` மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி நேற்று உரையாற்றினார்.
இந்தியா அமெரிக்கா வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் டெல்லியிலிருந்து காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோதி உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய நரேந்திர மோதி வாழ்வது எந்தளவுக்கு ஏதுவானதாக இருக்கவேண்டுமோ அதேபோல தொழில் செய்வதும் ஏதுவானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வெளிப்படையானதாகவும் சீர்திருத்தங்களை மையப்படுத்தியதாகவும் மாற்றுவதற்காக தாங்கள் முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறினார்.
விரிவாகப் படிக்க: நரேந்திர மோதி உரை: "இப்போது இந்தியா வாய்ப்புகளின் நிலம்"
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் விடுபட்ட 444 பேர்
தமிழ்நாட்டில் பிற இணை நோய்களால் பாதிக்கப்பட்டு, கொரோனாவாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 444 பேரை கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் சேர்த்து தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஆக இருக்கும் நிலையில், அந்தப் பட்டியலில் 444 பேருடைய மரணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இணை நோய்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144ஆக உயர்ந்துள்ளது.
விரிவாகப் படிக்க: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் விடுபட்ட 444 பேர்
ராவணன்: "ஆதிகால விமானப் போக்குவரத்து" குறித்து ஆய்வு செய்ய இலங்கை அரசு திட்டம்
பண்டைய கால இலங்கை மன்னனான ராவணன் தொடர்பிலான ஆய்வுகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ராவணன் தொடர்பான புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அரசாங்கம் பத்திரிகை விளம்பரமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சினால் இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மன்னனான ராவணன் மற்றும் நாட்டின் விமானப் போக்குவரத்து வரலாறு குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ச்சிகளை நடத்த விரும்புவதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
விரிவாகப் படிக்க: ராவணன் குறித்த ஆய்வு: இலங்கை அரசின் மெகா திட்டம் - விரிவான தகவல்கள்
பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலையில் இன்னும் முடிவெடுக்காதது ஏன்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டுமெனக் கோரி, அவருடைய தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம். வேலுமணி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பினர். மேலும், அரசியல்சாஸனப் பொறுப்பில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற விஷயங்களில் காலக்கெடு விதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.
விரிவாகப் படிக்க: ஏழு தமிழர்கள் விடுதலை: இன்னும் முடிவெடுக்காதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :