You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ராமர் குறித்த பிரதமரின் கருத்து அரசியல் சார்ந்தது இல்லை" - நேபாள அரசு விளக்கம்
நேபாள பிரதமரின் ராமர் குறித்த கருத்து, அரசியல் கருத்து அல்ல, அது யார் மனதையும், உணர்வையும் புண்படுத்த கூறப்படவில்லை என அந்நாடு விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார்.
அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் ராமர் பிறந்தார் என அவர் கூறினார்.
கே.பி. ஷர்மா ஒலி ராமர் பற்றி என்ன பேசினார்?
நேபாள கவிஞர் பனுபக்தாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அவர் இவ்வாறாகப் பேசினார்.
பனுபக்தா நேபாளத்தில் கொண்டாடப்படும் கவிஞர். மேற்கு நேபாளத்தில் உள்ள தனு பகுதியில் 1814ஆம் ஆண்டு பிறந்த இவர், வால்மீகியின் ராமாயணத்தை நேபாள மொழியில் மொழிபெயர்த்தார். 1868ஆம் ஆண்டு காலமானார்.
அந்த நிகழ்வில் பேசிய நேபாள பிரதமர் கே..பி ஷர்மா ஒலி , "ராமர் பிறந்த உண்மையான அயோத்தி எங்கள் நாட்டில்தான் உள்ளது. இந்தியாவில் உள்ள அயோத்தியாவில் வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம். நம் அயோத்தியாவில் இல்லை," என அவர் கூறி உள்ளார்.
நேபாளத்திலேயே எதிர்ப்பு
நேபாள பிரதமரின் இந்த கருத்துக்கு நேபாளத்திலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் கமல் தபா, இந்தியா நேபாள உறவை மேலும் சிதைக்கும் வகையில் ஷர்மா ஒலியின் பேச்சு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேபாள எழுத்தாளரான கனக் மணி தீக்ஷித், "இந்திய அரசுடன் முரண் இருக்கும் போது, இப்போது அந்நாட்டு மக்களுடன் முரண் ஏற்படும் வகையில் ஒலி பேசி உள்ளார்," என கருத்து தெரிவித்துள்ளார்.
நேபாள அரசு விளக்கம்
இந்நிலையில் நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள பிரதமர் வெளியிட்ட கருத்து அரசியல் கருத்து அல்ல. அதை யார் மனதையும், உணர்வையும் புண்படுத்த கூறப்படவில்லை.
ராமர் மற்றும் அவரின் பிறப்பிடம் தொடர்பாக பல்வேறு கதைகள் உள்ளன எனவே, ராமர், ராமாயணம் மற்றும் அதனோடு தொடர்புடைய இடங்களின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ள ராமாயணத்தில் வரும் மிகப்பெரிய கலாசார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் பிரதமர் அவ்வாறு கூறினார்.
அயோத்தியின் மதிப்பையோ அல்லது அதன் கலாசார முக்கியத்துவத்தையோ குறைப்பதற்காகவோ இந்த கூற்றை கூறவில்லை.
ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் விவாஹா பஞ்சமி திருவிழாவின்போது, இந்தியாவின் அயோத்தியிலிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் வரை திருமண ஊர்வலம் நடைபெறும். மேலும் 2018ஆம் ஆண்டு ஜனக்பூரிலிருந்து அயோத்திக்கு பேருந்தும் விடப்பட்டது. இது இரு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள கலாசார பந்தத்தை குறிப்பதாக உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய - நேபாள உறவு
கடந்த சில மாதங்களாக இந்தியா நேபாள உறவு சுமுகமாக இல்லை. எல்லை சார்ந்த பிரச்சனை இரு நாடுகள் இடையே நிலவுகிறது.
1816இல் ஆங்கிலேயர்கள் மற்றும் நேபாளம் தரப்பினரிடையே கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிம்பியாதுரா பகுதியில்தான் மகாகாளி நதியின் மூலம் இருப்பதாக நேபாள அரசு கூறி வருகிறது.
ஆனால் அதனை ஏற்க மறுக்கும் இந்தியா, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளுக்குக் கிழக்கேதான் அந்த நதி உருவாவதாகக் கூறுகிறது.
இந்நிலையில்தான் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கு நேபாளம் நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
இந்திய ஊடகங்களுக்கு எச்சரிக்கை
இதன் இடையே இந்திய ஊடகங்களையும் எச்சரித்தது நேபாளம்
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சீன தூதர் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்ததை தொடர்ந்து அம்மாதிரியான "புனையப்பட்ட, கற்பனையான" செய்திகளுக்கு எதிராக "அரசியல் மற்றும் சட்டரீதியான" நடவடிக்கை எடுக்கப்படும் என ஜூலை 10ஆம் தேதி நேபாள அரசு தெரிவித்தது.
நேபாளத்திற்கான சீன தூதர் யாங் ச்சி, காத்மாண்டுவில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்தன. நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் யூபா ராஜ் காத்திவாடா, இந்திய ஊடகங்களில் வரும் அம்மாதிரியான செய்திகள் வலுவான "அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வித்திடும்" என தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :