You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டனில் பார்கள் திறப்பு: ‘குடிப்பவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை’ - மற்றும் பிற செய்திகள்
பிரிட்டனில் மீண்டும் மதுபான கடைகள் மற்றும் பார்கள் உள்ளிட்டவை, சனிக்கிழமை (ஜூலை 4) முதல் திறக்கப்பட்ட நிலையில், குடித்துவிட்டு வருபவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என லண்டன் மாநகரின் போலீஸ் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் மதுபான பார்கள் உள்ளிட்டவை ஜூலை 4-ஆம் தேதி திறக்கப்பட்ட சூழலில், மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்களும், அமைச்சர்களும் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலையை தவிர்க்க மக்கள் அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், அரசு அதிகாரிகள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சின் போலீஸ் கூட்டமைப்பு ஒன்றை சேர்ந்த ஜான் ஆப்டர் கூறுகையில், "குடித்துவிட்டு வருபவர்களால் நிச்சயம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது. அவர்கள் அவ்வாறு பின்பற்ற மாட்டார்கள் என்பதும் மிகவும் தெளிவாக தெரிகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
"மிகவும் பரபரப்பான இரவாக அமைந்தது இந்த இரவு. ஆனால் போலீஸ் அதிகாரிகள் முடிந்தவரை திறன்பட சமாளித்தனர். சில பகுதிகளில் பிரச்னைகள் ஏற்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டதும் நடந்துள்ளது,'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
லண்டன் உள்ளிட்ட பிரிட்டனின் பல இடங்களில் பெருந்திரளாக மக்கள் மதுபான விடுதிகளில் அருகருகே அமர்ந்து மது அருந்தும் ஏராளமான படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இவை பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக கூறப்படுகிறது.
இதனிடையே பெரும்பாலான மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டதாக போலீஸ்துறையின் சார்பாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 போர் - எந்த நாடுகள் வென்றன, எவை தோல்வியுற்றன?
கொரோனா பெருந்தொற்று உலகளவில் 1 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் ஆபத்தான நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், உலகின் சில நாடுகள் இப்போது இந்த நோய் மிக வேகமாகப் பரவுவதைக் காண முடிகிறது.
கொரோனா தொற்று முதன் முதலில் 10 லட்சம் பேருக்குப் பரவ மூன்று மாதங்கள் ஆனது. ஆனால், தற்போது வெறும் 8 நாட்களில் 10 லட்சம் பேருக்கு பரவியுள்ளது.
அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரணம்: இதுவரை நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது முதல் தற்போது வரை நடந்த நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஏன் கைது?
கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.
விரிவாக படிக்க:சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரணம்: இதுவரை நடந்தது என்ன?
தடை செய்யப்பட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாம் உண்ணும் உணவில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்
நாகரிக கால சமையல் முறைகள் , நச்சு ரசாயனப் பொருட்களை உருவாக்குவதில் தொடங்கி, புற்றுநோய் ஆபத்து வரை ஏற்படுத்தும், ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. அவற்றைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
"நமக்கான உணவை சமைக்கத் தொடங்கியதன் காரணமாகத் தான் நாம் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறோம்," என்று ஜென்னா மெக்கியோச்சி உறுதியாகக் கூறுகிறார்.
"நாம் சமைக்காத சிலவற்றை மட்டும் சாப்பிட்டு வந்த காலத்தில், தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் சமைக்காத உணவுப் பொருட்களிலிருந்து சத்துகளை எடுத்துக் கொள்ள நமது உடல் போராட வேண்டியிருந்தது'' என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: