கொரோனா வைரஸ்: ‘இந்தியாவில் கோவிட்-19 தொற்றிலிருந்து 48.07 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்’ - சர்வதேச தகவல்கள் என்ன?

இந்தியாவில் இதுவரை 95, 527 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 48.07-ஆக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் லாவ் கார்வால் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்பு சதவீதம் 2.82 மட்டுமே என்றும் இது உலக அளவில் மிக குறைந்த உயிரிழப்பு சதவீதங்களில் இதுவும் ஒன்று எனவும் லாவ் அகர்வால் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 1,98,706 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் குணமடைந்தவர்கள் 95,526. தொற்று உண்டானபின் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 5,598 ஆக உள்ளது.

நாடு முழுவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 97,581 ஆகும்.

புதிதாக இந்தியாவில் 8,392 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதான் ஒரே நாளில் கோவிட்-19 தொற்று எண்ணிகையில் உண்டான அதிகபட்ச உயர்வாகும்.

70,013 பேருக்கு கோவிட்-19 உண்டாகியுள்ள மகாராஷ்ரா இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

மகாராஷ்ராவுக்கு அடுத்த இடங்களில் தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மேற்கண்ட எட்டு மாநிலங்களில் மட்டும் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90% பேர் உள்ளனர்.

மலேசியாவில் முடக்க நிலையின் போதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மலேசியாவில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா கிருமித்தொற்றியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,877ஆக அதிகரித்தது.

இவர்களில் 15 பேர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள். இருவர் மலேசியர்கள். தொடர்ந்து 11ஆவது நாளாக மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 66 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வேளையிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மலேசியாவில் அதிகரித்துள்ளது. மேலும் மது சம்பந்தப்பட்ட விபத்துகளும் அதிகரித்துள்ளன.

அண்மையில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்திய போலீஸ்காரர் மீது ஒரு வாகனம் மோதியதை அடுத்து, மது விற்பனை தொடர்பாக அண்மையில் அளிக்கப்பட்ட உரிமங்களை நிறுத்தி வைப்பதாக கோலாலம்பூர் மாநகர மன்றம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் நிலவரம்

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பல இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்பது தொடர்ந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று புதிதாக மேலும் 544 பேருக்கு வைரஸ் தொற்றியது உறுதியானது. இதுவரை 35,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சில நடவடிக்கைகள் தளர்த்தப்படுவது அனைவருக்கும் பெரும் நிம்மதியைத் தரும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சில ஆபத்துகளும் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

"வைரஸ்தொற்றை எதிர்கொள்வது என்பது வேகமாக ஓடி முடிக்கும் குறுகிய தூர ஓட்டப் பந்தயமல்ல. அது நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தைப் போன்ற நீண்டகால போராட்டம்.

"மனித வாழ்வியல் முறையில் உள்ள பலவீனங்களை கொரோனா வைரஸ்தொற்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எனினும் இது நமது மீள்திறனைக் காட்டவும் பிரச்சினையிலிருந்து மீண்டு கூடுதல் வலிமையுடன் திகழவும் வாய்ப்பளித்துள்ளது," என பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

அந்நியத் தொழிலாளர்களுக்காக 2 ஆண்டுகளுக்குள் 11 புதிய தங்கு விடுதிகள் கட்டப்படும் என்றும், இவற்றில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தங்க இயலும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை எத்தனை?

இந்தியா முழுவதும் இதுவரை 39,66,075 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவிக்கிறது.

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதால் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இதைவிடக் குறைவாகவே இருக்கும்.

கோவிட்-19: உலக அளவிலான எண்ணிக்கை எவ்வளவு?

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை 66 ஆயிரத்தை கடந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 நோய்த்தொற்றால் உலக அளவில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 27 லட்சம் மேற்பட்டவர்கள் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

உலக நாடுகளின் பாதிப்பு, மரணம் மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கையை கீழ்க்கண்ட பிபிசியின் சிறப்புப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

உலக அளவில் 10,000க்கும் அதிகமான உயிழப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இன்று மெக்சிகோவின் சேர்ந்துள்ளது. அங்கி இதுவரை 10,167 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள்

  • அமெரிக்கா: பாதிப்பு - 18,11,357 பேர்
  • பிரேசில்: பாதிப்பு - 5,26,447 பேர்
  • ரஷ்யா: பாதிப்பு - 4,14,328
  • பிரிட்டன்: பாதிப்பு - 2,77,736
  • ஸ்பெயின்: பாதிப்பு - 2,39,638

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: