You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வழிபாட்டில் கஞ்சா பயன்படுத்திய இஸ்ரேலியர்கள் - சுவாரஸ்யமான தகவல்களை தந்த தொல்பொருள் ஆய்வு மற்றும் பிற செய்திகள்
"வழிபாட்டில் கஞ்சா"
பழங்கால இஸ்ரேலியர்கள் வழிபாட்டில் கஞ்சா பயன்படுத்தியது ஒரு தொல்பொருள் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது வழிபாட்டின் போது கஞ்சாவை எரித்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
2,700 ஆண்டுகள் பழமையான டெல் அராட் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. யூத வழிபாட்டு முறையில் இவ்வாறான போதைப் பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.
தெற்கு டெல் அவிவிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த பழங்கால கோயில் 1960ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவை உலுக்கும் கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு
2019-20ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1% ஆக குறைந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான இந்த விவரம் இன்று இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டின் நான்கு காலாண்டுகளுக்குமான தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019-20இல் 4.2% ஆக உள்ளது.
விரிவாகப் படிக்க: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு
வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை என்று அரசு கூறியது உண்மையா?
கொரோனா வைரஸை அடுத்து இந்தியாவை வெட்டுக்கிளிகள் மிரட்டி வருகின்றன. இந்தியாவின் வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளை விரட்ட தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் பெரும் பயன் உள்ளதா என்பது தெரியாத நிலையில், அந்த தெளிப்பான்கள் விளைச்சலை பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் என பரவ தொடங்கியுள்ள வெட்டுக்கிளி படையெடுப்பு தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளதா, அதை விரட்ட பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் என்னவாக இருக்கும் என விளக்கமாக தெரிந்துகொள்ள சென்னையைச் சேர்ந்த தாவரவியலாளர் நரசிம்மனிடம் பேசினோம்.
மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு: தி.மு.க., பா.ம.க. வழக்கு
தமிழக மருத்துவக் கல்லூரி இடங்களில் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கோரி தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியும் இது தொடர்பாக ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: