You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Remdesivir: கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் இந்தியா, பாகிஸ்தான் - 127 நாடுகளுக்கு பலன்
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் (Remdesivir) மருந்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கைலீட் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்காவின் கைலீட் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள காப்புரிமை பெறப்படாத மருந்துகளைத் தயாரிக்கும் ஐந்து நிறுவனங்களிடம் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் 127 நாடுகளுக்கான வைரஸ் மருந்தை தயாரிப்பதற்கு உதவும்.
ரெம்டிசீவர் மருந்து கொரோனா வைரஸ் தொற்று உண்டானால், அதன் அறிகுறிகள் தென்படும் காலத்தை 15 நாட்களிலிருந்து 11 நாட்களாக குறைக்கிறது என்று உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ரெம்டிசீவர் இபோலா நோய்த் தொற்று சிகிச்சைக்காக முதல் முதலில் உருவாக்கப்பட்டது. உடலில் உள்ள உயிரணுக்களில் வைரஸ் இனப்பெருக்கம் செய்வதற்கு உதவும் நொதியத்தை (enzyme) தாக்குவதன் மூலம்
உடலுக்குள் வைரஸின் எண்ணிக்கை அதிகரிப்பதை இந்த மருந்து தடுக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கைலீட் நிறுவனத்திடமிருந்து இரண்டு ரெம்டிசீவர் மருந்தை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெறும். இதன் மூலம் அந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் அளவு அதிகரிக்கும் என்று கைலீட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 உண்டாக்கிய பொது சுகாதார அவசர நிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கும் வரையோ கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்து அல்லது அதை தடுப்பதற்கான தடுப்பூசி ஆகியவற்றில் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கும் வரையிலோ காப்புரிமை கட்டணம் எதுவும் வாங்காமல் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிப்லா லிமிடட், பெரோஸான்ஸ் லேபரட்டரிஸ், ஹெட்ரோ லேப்ஸ், ஜூபிலியன்ட் லைஃப் சயின்சஸ், மற்றும் மைலன் ஆகிய நிறுவனங்கள், கைலீட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
"இந்த மருந்தின் விலை அல்லது எப்போது தயாரிப்பு தொடங்கப்படும் என்பதை இப்போதே கூறுவது கடினமானது. ஜூன் மாதத்தில் எல்லாம் தெளிவாகும். அரசு மருத்துவமனைகளில் இவை கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதைப் பயன்படுத்தலாம் என்று இந்திய அரசு ஒருவேளை முடிவு செய்தால், அதற்கு இந்தியாவிடம் போதிய அளவு ரெம்டிசீவர் மருந்து இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என்று ஹைதராபாத்தில் உள்ள ஹெட்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வம்சி கிருஷ்ண பண்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு கோவிட்-19 சிகிச்சை
இந்தியாவில் உள்ள நோயாளிகளிடம் இந்த மருந்து எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். இந்திய நிறுவனங்களால் இந்த ரெம்டிசீவர் மருந்தை உற்பத்தி செய்ய முடிந்தால் அதை இந்திய நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் போது பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்தலைவர் தெரிவித்திருந்தார்.
"ஆரம்ப கட்ட சோதனைகளின் முடிவுகளில் இந்த மருந்து பலன் அளிப்பதாகவே தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகளுக்காக நாங்கள் காத்திருப்போம். வேறு நிறுவனங்கள் இதை தயாரிக்க முடியுமா என்பது குறித்தும் பார்ப்போம்," என்று ராமன் கங்காகேத்கர் தெரிவித்திருந்தார்.
ரெம்டிசீவர் மருந்து என்ன செய்யும்?
அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் மையம் ரெம்டிசீவர் மருந்தை வைத்து 1063 நோயாளிகளிடம் பரிசோதனை செய்தது. சில நோயாளிகளுக்கு ரெம்டிசீவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலருக்கு ப்லேசிபோ (placebo) அதாவது மருந்து என்ற பெயரில் வேறு ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக நம்பவைத்து ஆய்வு நடந்தது.
நோயாளிகள் குணம் அடைவதற்கான காலத்தை ரெம்டிசீவர் மருந்து கணிசமாக குறைத்துள்ளது என்று அந்த மையத்தின் தலைவர் அந்தோணி ஃபாசி தெரிவித்திருந்தார்.
இந்த மருந்து கொரோனா வைரஸை தடுப்பதற்கும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய சாதனங்களுக்கான கதவுகளை திறந்து உள்ளது என அந்த முடிவுகள் குறித்து ஆய்வு முடிவுகள் குறித்து அவர் தெரிவித்திருந்தார்.
ரெம்டிசீவர் அனைவருக்கும் பலன் தருமா?
ரெம்டிசீவர் மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இறப்பு விகிதம் 8% ஆகவும் ப்லேசிபோ சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இறப்பு விகிதம் 11. 6 சதவிகிதம் ஆகவும் இருந்தது. எனினும் இது முக்கியத்துவம் வாய்ந்ததா என்று குறிப்பிட இயலாது. ஏனெனில் இந்த இரண்டு விகிதங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு கணிசமானதுதானா என்பதை ஆய்வாளர்களால் கூற இயலவில்லை.
இந்த மருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய உதவுகிறதா, அல்லது அவர்கள் தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை தடுக்கிறதா, இளம் வயதினருக்கு அதிக பலனளிக்கிறதா அல்லது முதியவர்களிடம் அதிக பலனளிக்கிறதா, ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் இந்த மருந்து எந்த அளவுக்கு பலன் தருகிறது போன்ற சில கேள்விகள் மருந்து குறிதத்து இருப்பதாக பிபிசியின் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் கல்லாகர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- Anti CAA - NRC Protest: டெல்லி கலவரத்தை தூண்டியதாக திகார் ஜெயிலில் 4 மாத கர்ப்பிணி – நடந்தது என்ன?
- அமேசான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் தெரியுமா? - இதுதான் காரணம்
- நரேந்திர மோதியின் ‘சுயசார்பு’ கனவு சாத்தியமா? சீனாவை வீழ்த்த முடியுமா?
- கொரோனா வைரஸ்: சிறப்பு ரெயில்களில் எவ்வளவு டிக்கெட்டுகள் முன்பதிவாகி இருக்கிறது தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: