கொரோனா வைரஸ்: இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் எவ்வளவு குறைந்திருக்கிறது தெரியுமா? - மற்றும் பிற செய்திகள்

இந்தியாவில் கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கரியமில வாயு வெளியேற்றம் குறைந்திருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.

இதற்கு கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மட்டும் காரணமல்ல. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சார்ந்து இருக்க தொடங்கி இருப்பது, புதைபடிவ எரிபொருட்களின் தேவையை குறைத்திருக்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறது சூழலியல் இணையதளமான கார்பம் ப்ரீஃப். ஆனால், அதே நேரம் மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட சமூக முடக்கம் கரியமில வாயு வெளியேற்றம் திடீரென குறையக் காரணமாக அமைந்திருக்கிறது.

அதாவது மார்ச் மாதம் 15 சதவீத அளவில் குறைந்த வெளியேற்றம், ஏப்ரலில் 30 சதவீதமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நரேந்திர மோதி பேசியது என்ன ?

செவ்வாய் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்தி மோதி பொருளாதார உதவித் தொகுப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான நான்காம் கட்ட ஊரடங்கு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இது கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்திய பின்பு நரேந்திர மோதி இந்திய மக்களுக்கு ஆற்றும் மூன்றாவது உரையாகும். மோதி ஆற்றிய உரையின் 10 முக்கியத் தகவலைகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 8718 ஆனது

தமிழகத்தில் இன்று புதிதாக 716 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே4ம் தேதி முதல் தினமும் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் சென்னை நகரத்தில் உள்ளனர் என்பதை சுகாதாரத்துறையின் அறிக்கை உணர்த்துகிறது.

விழுப்புரம் சிறுமியை எரித்துக் கொன்றது ஏன் ?

விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி இருவர் எரித்த அதிமுக பிரமுகர்கள் சிறுமியை எரித்தது ஏன் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில், சிறுமி கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் அன்றிரவே விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று, திங்கள், காலை உயிரிழந்துள்ளார்.

'கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏழைகள் பட்டினி'

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து குஜராத் உயர் நீதிமன்றம் திங்களன்று தாமாக முன்வந்து விசாரித்தது.

குடிமக்கள் பட்டினி கிடக்காமல் இருப்பதை உறுதிசெய்வது அரசு அதிகாரிகளின் தலையாய கடமை என்று நீதிபதிகள் பி.பி. பார்திவாலா மற்றும் இலேஷ் வோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையின்போது தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: