கொரோனா வைரஸ் மருந்து: நிதி திரட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக எட்டு பில்லியன் (800 கோடி) அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என உலக தலைவர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் இணையத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் 40 நாடுகள் கலந்து கொண்டன.

இந்த தொகையைக் காட்டிலும் மேலும் கூடுதலான தொகை தேவைப்படலாம் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா ஃபான் டேர் லெயன் தெரிவித்தார். இந்த நன்கொடை 30க்கும் அதிகமான நாடுகள், ஐ.நா சபை, தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. சீனா சார்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன பிரதிநிதி இதில் கலந்து கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. நார்வேயும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய அளவிலான தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் 500 மில்லியன் யூரோ தருவதாக தெரிவித்துள்ளது. சௌதி அரேபியா, ஜெர்மனி போன்ற நாடுகளும் கிட்டதட்ட இதே அளவு தொகையை தருவதாக உறுதியளித்துள்ளன.

ஜப்பான் 800 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியிலிருந்து இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு மருந்து ஒன்றே வழி என ஐ.நா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்தது ஏன்?

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 527 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விளையாட்டால் விபரீதம்

ஆந்திரப்பிரதேசத்தில் முடக்க நிலை காலத்தில் பொழுது போக்குவதற்காக ஒரு நபர் செய்த சில செயல்களால் 56 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா எந்த திசையில் பயணிக்கும்?

நாட்டில் மாற்றம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் பிரதமர் நரேந்திர மோதி பேச்சில் தென்படுகின்றன. அண்மையில் நாட்டின் பஞ்சாயத்து அமைப்புகளின் தலைவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங்கில் உரையாற்றிய அவர். கொரோனா நெருக்கடி ஒரு புதிய செய்தியை மட்டுமல்ல, புதிய திசையையும் காட்டியுள்ளது என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

மஹிந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையில் கொவிட்-19 பிரச்சனை வலுப் பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்றமும் வலுவிழந்துள்ளமை பாரிய பிரச்சனையாக காணப்படுகிறது.

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: