கொரோனா வைரஸ்: கோவிட்-19 விளையாட்டை தடை செய்த சீனா - ஏன் தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸை மையக்கருவாக கொண்ட விளையாட்டை தடை செய்துள்ளது சீன அரசு.

கொரோனாவால் தாக்கப்பட்ட ஜோம்பிகள் (Zombies) வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதுதான் விளையாட்டின் மைக்கரு. சீன கொடி வண்ணத்தில் சிவப்பாகவும், கொடியில் நட்சத்திரங்கள் உள்ள இடத்தில் கொரோனாவைரஸ் வடிவத்தை வைத்தும் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல தைவான் சீனாவின் பகுதி அல்ல, ஹாங்காங்கை விடுதலை செய் போன்ற அரசியல் விஷயங்களும் இந்த விளையாட்டில் இடம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்த மொபைல் விளையாட்டு தடை செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவின் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களின் ஆர்டரை ரத்து செய்த இந்தியா

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்கான, சுமார் ஐந்து லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்களுக்கான (rapid testing kit) ஆர்டர்களை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கருவிகளில் பெரும்பாலானவை தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சையில் உதவும் தப்லிக் ஜமாத் அமைப்பினர்

டெல்லியின் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணமடைந்த பலர் தங்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாக்களை (ஊநீர்) வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னும் பலருக்கு அந்த பிளாஸ்மாக்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று பரவ தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். எனவே தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முஸ்லிம்கள் பிளாஸ்மா சிகிச்சை முறைக்காக ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளனர்.

கொரோனா: நேற்றைய தகவல்கள் முழுமையாகப் தெரிந்து கொள்ள

தமிழ்நாட்டில் இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உடையவர்களின் எண்ணிக்கை 2058ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 809ஆக இருந்த நிலையில், இன்று 902ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களில் 80 பேர் ஆண்கள். 41 பேர் பெண்கள்.

கொரோனோவிலிருந்து குணமடைந்து 27 பேர் வெளியேறியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,128ஆக உயர்ந்துள்ளது. 68 வயது நபர் ஒருவர் இன்று தனியார் மருத்துவமனையில் இந்நோயால் உயிரிழந்துள்ளார். ஆகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை25ஆக உயர்ந்திருக்கிறது.

இன்று நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 12 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கள்ளக்குறிச்சியில் 3 பேரும் நாமக்கல் மாவட்டத்தில் இருவரும் காஞ்சிபுரத்தில் ஒருவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நோயாளிகள் யாரும் இல்லை.

ஐதராபாத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தாக்கப்பட்ட இஸ்லாமியர்கள்

இரண்டு இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக கூறப்பட்டு பசுக் காவலர்கள் என கூறப்படும் நபர்களால் தாக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவுடன் பசுமாட்டை போற்றும் ஒரு பாடலும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் "கோமாதவை கொல்பவர்களை கொல்ல வேண்டும்" என்று கூறப்படுகிறது. அந்த வீடியோ இஸ்லாமியர்களை தாக்கிய ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, ஐதராபாத்தின் புறநகர் பகுதியான கட்சேகர் என்னும் பகுதியில் நடந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: