You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: “அதீத அதிகாரத்தை கைப்பற்ற கோவிட் 19ஐ அரசுகள் பயன்படுத்தும்” - எச்சரிக்கும் வல்லுநர்கள்
கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணருமான நோம் சாம்ஸ்கி, "தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து … லாபமற்று மனிதாபிமானத்துடன் இயங்கிய அமைப்புகளை முழுவதுமாக சிதைப்பது வரை இருக்கும்," என்று எச்சரிக்கிறார்.
"இந்த அதிக சர்வாதிகாரம் நிறைந்த, மோசமான அமைப்புகள் புதிய தாராளமயத்துடன் மிகவும் ஒத்துப்போகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்." என்று நோம் சாம்ஸ்கி ஒரு உரையாடலில் தெரிவிக்கிறார்.
அதுபோல எட்வர்ட் ஸ்னோடென் கொரோனா வைரஸை பயன்படுத்தி உலகெங்கும் அரசுகள் அதீத அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்யும் என எச்சரிக்கிறார்.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறை ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்டார்.
அவர், "இந்த கொரோனாவை பயன்படுத்தி அரசுகள் நம்மை முன்பு எப்போதும் இல்லாததைவிட மிக அதிமாக கண்காணிக்கின்றன," என்று அவர் தெரிவிக்கிறார்.
இவர் ஒரு பக்கம் என்றால் கொரோனா வைரஸால் பொருளாதாராம் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிதையும் என எச்சரிக்கிறது சர்வதேச் நாணய நிதியம்.
90 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பொருளாதாரப் பெருமந்தம்
உலக அளவில் பல செயல்பாடுகளை கொரோனா வைரஸ் முடக்கிவிட்டது.
இந்த ஆண்டில் சர்வதேச வணிகத்தில் பெரிய சரிவு இருக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ.) கணித்துள்ளது.
இந்த ஆண்டில் உலக வணிகம் 13 முதல் 32 சதவீதம் வரை சரியும் என்று உலக வர்த்தக அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நெருக்கடியில் நிச்சயமற்ற நிலை இருப்பதற்கான பரவலான சாத்தியக்கூறுகள் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளன.
ஒரு பதிற்றாண்டு காலத்துக்கு முன்னதாக நிகழ்ந்த வாணிப மந்த நிலையில் ஏற்பட்டதைவிட அதிகமான வர்த்தக சரிவு இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
சரிவை மிகக் குறைவாக கணித்தாலும், 90 ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொருளாதாரப் பெருமந்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவுக்கு இது இருக்கலாம், ஆனால் இப்போது குறுகிய காலக்கட்டத்துக்குள் அது நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
இது ``விரும்பத்தகாத'' தகவலாக இருக்கிறது என்று உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் ரொபர்ட்டோ அஜெவெடோ கூறியுள்ளார்.
``இதைப் புறக்கணித்துவிட முடியாது'' என்று அவர் எச்சரிக்கிறார். சுகாதார நெருக்கடிதான் முக்கியமானது என்று கூறியுள்ள அவர், மக்களின் உயிரைக் காப்பதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
``வர்த்தகம் மற்றும் உற்பத்தியில் தவிர்க்க முடியாத சரிவு ஏற்படுவது, குடும்பங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும். நோயின் காரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட மோசமானதாக இது இருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.
சரக்கு வர்த்தகம் 13 சதவீதம் சரியும் என்பது ஓரளவுக்கு பரந்த மனதுடனான கணிப்பு. அது இன்னும் பெரிய சரிவாக இருக்கும். 2020-ன் இரண்டாவது அரையாண்டில் அதன் மீட்சி இருக்கலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுகாதார நெருக்கடியை தீர்த்த பிறகு, அடுத்த சில மாதங்களில் இருக்கும் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் அந்த முன்னேற்றங்கள் இருக்கும்.
எனவே அது உத்தரவாதமான வளர்ச்சி அல்ல. ஆரம்பத்தில் பெரும் சரிவு ஏற்படும், அது நீடித்து, மீட்சி பெறும் முயற்சி தொடரலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.
``நிச்சயமற்ற நிலைக்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் இந்த முடிவுகளைவிட அதிகமான அல்லது குறைவான பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.
கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்கெனவே உலக வர்த்தகத்தின் வளர்ச்சி தடைபட்டிருந்தது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. 2019 கடைசி காலாண்டு காலத்தில் சரக்கு வர்த்தகம், முந்தைய ஆண்டைவிட ஒரு சதவீதம் குறைவாக இருந்தது.
``தொடர்ந்து நீடித்த வர்த்தகப் பதற்றநிலை'' காரணமாக அந்த நிலை இருந்தது என்று உலக வர்த்தக அமைப்பு கூறியுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்கு இடமான சர்வதேச வர்த்தக அணுகுமுறைகளை சுட்டிக்காட்டுவதாக அது உள்ளது.
இந்த நெருக்கடிக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியில் முக்கிய அம்சமாக வர்த்தக வளர்ச்சி இருக்கும் என்று அஜெவெடோ கூறியுள்ளார். சந்தைகளை திறந்த மனதுடன் அணுகும் நிலையில், அதனை ஊக நிலையில் வைதிருப்பது சிக்கலானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: