கொரோனா வைரஸ் - மிரட்டும் கொரோனா: ஒரே நாள் பலி எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்ட மலேசியா

பட மூலாதாரம், Rahman Roslan / getty images
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இது புதிய உச்சமாகும். இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதும் உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,470 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
இதேவேளையில் கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு, முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கையும் மலேசியாவில் அதிகரித்துள்ளது ஆறுதல் தகவல். இன்று மட்டும் 68 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதுவரை மலேசியாவில் 388 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள்
இதற்கிடையே சில புள்ளி விவரங்களையும் மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்டது. சுமார் 55.6 விழுக்காட்டினர் 60 வயதைக் கடந்தவர்கள் என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும், இவர்களில் பலருக்கு நீரிழிவு, இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"மொத்தம் 67.6 விழுக்காட்டினருக்கு சிறுநீரக, இருதய நோய், நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் இருந்துள்ளன. உயிரிழந்தவர்களில் 27 மற்றும் 37 வயதான ஆடவர்களும் அடங்குவர்," என அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
"நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் தனியார் அமைப்புகள் மட்டுமல்லாமல் பிற அமைச்சுகளும் உதவி வருகின்றன.
"உயர்கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பத்து ஆய்வுக் கூடங்களை அமைக்க இரு அமைச்சுகள் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு கூடுதலாக 1,414 அதாவது மாதத்துக்கு 42,420 பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
91 வயது மூதாட்டி: உயிரிழந்தவர்களில் மிகவும் வயதானவர்; 27 வயது இளையரும் மரணம்
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 91 வயது மூதாட்டி பலியானார். நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களில் இவர்தான் மிக அதிக வயதுடையவர்.

இம்மூதாட்டிக்கும் நீரிழிவு, சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மார்ச் 26ஆம் தேதி மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அம்மூதாட்டி உயிரிழந்தார்.
இந்நிலையில், 27 வயதான இளைஞர் ஒருவரையும் கொரோனா வைரஸ் பலி கொண்டுள்ளது. மலேசியாவில் பலியான 31ஆவது நபர் இவர். மார்ச் 27ஆம் தேதி கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞருக்கும் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் இருந்துள்ளது.
"சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களில் இவரே வயதில் சிறியவர். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.
அரசு ஆணையைப் பொருட்படுத்தாத நூற்றுக்கணக்கானோர் கைது
பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு சில நாட்கள் கடந்த பிறகும் பொதுமக்களில் சுமார் 3 விழுக்காட்டினர் அதற்குக் கட்டுப்படாமல் அலட்சியத்துடன் செயல்படுவதாக மலேசிய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். சனிக்கிழமை ஒரே நாளில் 649 பேர் கைதானதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் கைதானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இவர்களில் எழுபது பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும், தாங்கள் செய்த குற்றத்தை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
- கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்

"கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்னும்கூட சிலர் அரசு அணைக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள். எனவே இத்தகையவர்கள் தொடர்பாக கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவு வாங்குவதன் பொருட்டு சில நிமிடங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், சிலர் இந்த வாய்ப்பையும் தவறாகப் பயன்படுத்துவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு வாங்க வேண்டும் என்று சொல்லி, ஒரே நாளில் நான்கு முறை வீட்டை விட்டு வெளியே வந்த நபர் கைதாகி உள்ளனர்.
ஆயிரம் இடங்களில் வாகனச் சோதனை; சாலையில் திரிந்த 3 லட்சம் வாகனங்கள்:
மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சாலைத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. எனினும் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி இவற்றை எளிதில் கடந்து சென்றுவிடலாம் என சிலர் நினைப்பது தெரிய வருகிறது.
"சனிக்கிழமை மட்டும் நாடு முழுவதும் 997 இடங்களில் சாலைத் தடுப்புகள் போடப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது. மொத்தம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

"இதன் மூலம் நாட்டில் எத்தனை வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்துகின்றன என்பது தெரியவருகிறது. இந்நிலை கவலை அளிக்கிறது. மேலும் 3,223 வணிக வளாகங்களிலும் போலீசார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி திறந்திருந்த கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
"நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் எதுவும் உண்மையல்ல," என்றார் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.
பொருட்கள் வாங்க ஷாப்பிங் சென்றார் மலேசிய பிரதமர்
பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்தாலும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி, போதுமான அளவு கி்டைக்கும் என்றும் மலேசிய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியில் தனக்குத் தேவையான பொருட்களை வாங்கினார் மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்.
இது தொடர்பான காணொளிப் பதிவையும், புகைப்படங்களையும் அவர் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
"இன்று காலை கோலாலம்பூர் பேரங்காடிக்குச் சென்றிருந்தேன். சில பொருட்களைத் தேடிய அதே வேளையில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் கவனித்தேன்.
"நல்லவேளையாக 'சமூக விலகல்' என்பதற்கான அவசியம் குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். கடவுளுக்கு நன்றி. அந்தப் பேரங்காடியில் தேவையான பொருட்கள் அனைத்தும் நிறைந்திருந்தன. எனவே மக்கள் பதற்றமடையத் தேவையில்லை," என தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் மொகிதின் யாசின் குறிப்பிட்டுள்ளார்.
பேரங்காடிக்கு வந்த பிரதமரின் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படுவது, அவர் பொருட்களைத் தேடியபடி வாடிக்கையாளர்களை நோட்டமிடுவது உள்ளிட்ட புகைப்படங்களும் அப்பதிவில் இடம்பெற்றுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












