You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: உலகம் முதல் தமிழகம் வரை - 10 முக்கியத் தகவல்கள் Coronavirus Latest News
உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட உலக நாடுகள் முதல் இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் வரை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும், அதுசார்ந்த நிகழ்வுகளையும் விளக்குகிறது இந்த தொகுப்பு.
- உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,717ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று ஒரே நாளில் 1,600 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் சிக்கல் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,39,645ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்களில் 98,840 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
- ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரப்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை 3,153 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,476ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு அதிகம் பேரை பலி கொடுத்த நாடாக இத்தாலி இருக்கிறது. ஸ்பெயினில் 28,768 பேருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்களில் 1,772 பேர் இறந்துள்ளனர். 2,575 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.
- இத்தாலி, சீனா, ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா மரணங்களை எதிர்கொண்டுள்ள நாடாக இரான் இருக்கிறது. அந்நாட்டில் 21,638 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 1,685 பேர் இறந்துள்ளனர். 7,931 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். தென் கொரியா பெருமளவில் நோயின் தாக்கத்தை மட்டுப்படுத்தியுள்ளது. சீனாவுக்கு வெளியே முதல் முதலாக அதிக நோய்த் தொற்றை எதிர்கொண்ட இந்த நாட்டில் இதுவரை 8,897 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் 104 பேர் இறந்துள்ளனர். 2,909 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.
- தொடக்கத்தில் கொரோனா தொற்று பெரிய அளவில் ஏற்படாமல் இருந்த அமெரிக்காவில் திடீரென கடந்த சில நாள்களாக புதிய தொற்றுகளின் எண்ணிக்கை சீறிப்பாயத் தொடங்கியுள்ளது. இப்போது சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. இதுவரை அந்த நாட்டில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை: 32,276. அமெரிக்காவில் இந்த தொற்றால் இதுவரை 417 பேர் இறந்துள்ளனர்.
- கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது. கனடாவை தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது குறித்து கவலை தெரிவித்துள்ளதால், இந்த விவகாரத்தில் ஜப்பான் மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 17,493 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 31ஆம் தேதி வரை முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
- "மக்கள் பலரும் முடக்க நிலையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. தயவு செய்து நீங்கள் உங்களை காத்து கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
- வாரத்தின் தொடக்க நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் 45 நிமிடங்களுக்கு பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பிறகு வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 3,600 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, சுமார் 7710 ஆக வீழ்ந்தது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பங்கு வர்த்தகம் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.
- தமிழகத்தில் இதுவரை ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் முழு உடல் நலன் பெற்று வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் இதுவரை மாநிலம் தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்படவில்லை என்றாலும், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை வரும் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- கொரோனா பாதிப்பை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், வீடுகளில் தனிமையாக இருக்கவேண்டும், பொது இடங்களில் இருக்கக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியபோதும், சிலர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதால், அவர்களால் பிறருக்கு கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :