You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி மற்றும் பிற செய்திகள்
இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது.
கடந்த புதன்கிழமை அன்று இராக்கில் உள்ள ராணுவத்தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு இங்கிலாந்து ராணுவ வீரர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இராக் ஆதரவு படைகள் மீது ஏற்கனவே மறைமுக தாக்குதல் நடத்திய குழு இரான் ஆதரவு குழுவினர் தான் என்று செனட் சபையில் பேசிய அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி கென்னத் மேக் கேன்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்கள் அல்லது அமெரிக்க ஆதரவு படைகள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது என அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் மார்க் எஸ்பெர் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் மார்க் எஸ்பெர் கூறுகிறார்.
இது போன்ற தாக்குதல் ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கர் ஒருவரை கொல்லப்பட்டதை கண்டிக்க அமெரிக்கா மற்றும் இரான் தொடர்ந்து பல பதில் தாக்குதலை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே இரானின் அதிகாரம் மிக்க மூத்த ராணுவ தளபதி குவாசெம் சுலேமானீயை கொல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் என் பி ஆர் கணக்கெடுப்பை துவங்க மாட்டோம் - தமிழக அரசு சொல்லும் காரணம் என்ன?
என்பிஆர் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு சில விளக்கங்களைக் கேட்டிருப்பதாகவும் அவை வரும்வரை தமிழ்நாட்டில் அந்தக் கணக்கெடுப்பு துவங்காது என்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், என்.பி.ஆரில் உள்ள மூன்று கேள்விகளில்தான் சிறுபான்மையினருக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும், அது குறித்து மத்திய அரசிடம் மாநில அரசு விளக்கம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ்: 'எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் சமாளிப்போம்'- மலேசிய அரசு
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வெளி நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாத, கிருமித் தொற்று உள்ளவர்களுடன் நேரடியாக தொடர்பில்லாத மலேசியர் ஒருவருக்கு கோவிட்-19 நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இத்தகைய நிலையை ஸ்போரேடிக் (sporadic) என்று குறிப்பிடுகிறார்கள். இது கிருமித் தொற்று பரவி இருக்கும் அளவையும் தன்மையையும் குறிப்பிடுகிறது. இத்தகைய நிலை ஏற்படும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை"
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.
என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.
விரிவாகப் படிக்க:ரஜினிகாந்த்: “நான் முதல்வர் ஆக விரும்பவில்லை”
கொரோனா: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸுக்கு வைரஸ் பாதிப்பு; ரசிகர்கள் சோகம்
தானும், தனது மனைவி ரீடா வில்ஸனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
63 வயதான ஹேங்க்ஸ் ஆஸ்கர் விருது பெற்றவர்.
தனக்கும், வில்சனுக்கும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், மருத்துவரின் உதவியை நாடியதாக கூறுகிறார்.
விரிவாகப் படிக்க:பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸுக்கு கொரோனா வைரஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: