You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி வன்முறை: இந்துத்துவவாதிகளை விமர்சித்த இரான் அதி உயர் தலைவர்
இந்துத்துவவாதிகள் மற்றும் அவர்களது கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லிம்களின் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை அதை சுற்றிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதுடன், சுமார் 200 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு இந்தியாவை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முதல் முறையாக இரானின் அதி உயர் தலைவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுதை பார்த்து உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் துக்கத்தில் உள்ளன. இஸ்லாமிய உலகத்திடமிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்க, இந்துத்துவவாதிகள் மற்றும் அவர்களது கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லிம்களின் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை ரீ-ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "இந்தியாவில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு மற்றும் முஸ்லிம்கள் படுகொலை விவகாரத்தில் மோதியின் இனவெறி இந்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இரானின் அதி உயர் தலைவர் காமேனி மற்றும் துருக்கி அதிபர் எர்துவான் ஆகியோருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இரானின் அதி உயர் தலைவரின் இந்த ட்விட்டர் பதிவில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆயிரக்கணக்கான கருத்துகள் குவிந்து வருவதோடு, அதை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மறுபகிர்வும் செய்துள்ளனர்.
அமித் ஷா பதவி விலக வலியுறுத்தல்
கடந்த மாதம் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த திங்கட்கிழமை கூடியது முதல் இன்று (வெள்ளிக்கிழமை) வரை டெல்லி வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தகோரி எதிர்க்கட்சிகள் விடுக்கும் கோரிக்கை அமளியில் முடிந்து அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
அதேபோல இன்றும் இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவையை மார்ச் 11ஆம் தேதி வரை ஒத்திவைத்த மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, "அவை திறம்பட செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து அர்த்தமுள்ள தீர்வை அடைய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லி வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: