கொரோனா வைரஸ்: மலேசியாவில் நான்கு பேர் பாதிப்பு, சீன பயணிகளுக்கு தடை - விரிவான தகவல்கள்

    • எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா கிருமித் தொற்றால் மலேசியாவில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 26 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக மலேசிய அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் அனைத்து குடிநுழைவு மையங்களிலும் சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என்றும், நாட்டுக்குள் தரை வழியாகவும், விமானங்கள் மூலமாகவும் நுழையும் அனைத்துப் பயணிகளும் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அனைத்து நுழைவு மையங்களிலும் உடல் வெப்பத்தை அளவிடும் மருத்துவக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

கொரோனா கிருமித் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் பயணிகள் உடனடியாக குடிநுழைவு மையத்தில் இருந்து மேல் பரிசோதனைக்கான அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள மலேசிய மாநிலமான ஜொகூர் பாருவில் 6 குடிநுழைவு மையங்கள் உள்ளன. இவற்றுள் இரு மையங்கள் தரைவழியாக சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகளுக்காகச் செயல்படுகிறது. இவ்விரு மையங்கள் மூலம் தினமும் சராசரியாக 3500 சீன சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகின்றனர். இதையடுத்து இந்த மையங்களில் சீனப் பயணிகளுக்காக சிறப்பு குடிநுழைவு வரிசை திறக்கப்பட்டுள்ளது.

சீனப் பயணிகள் மலேசியாவில் நுழையத் தடை

இதற்கிடையே சீனாவின் வுஹான் மற்றும் ஹூபேய் பகுதிகளில் இருந்து வரும் சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமி பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மலேசியப் பிரதமர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகையான குடிநுழைவு அனுமதிகளும் (விசா) தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இயல்பு நிலை திரும்பியதும் இந்த உத்தரவு ரத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நடைமுறைகளை மலேசிய அரசு பின்பற்றி வருகிறது. மேலும் நிபுணர்களின் அறிவுறுத்தல்களையும் ஏற்றுச் செயல்படுகிறோம்," என மலேசிய அரசு கூறியுள்ளது.

இதுவரை 4 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு உள்ளது உறுதியானது

ஜனவரி 28ஆம் தேதி, மலேசிய நேரப்படி காலை 10 மணி வரை மலேசியாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிபா்பு இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 23 ஆம் தேதி காலை வரை மூன்று பேர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மாலை சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க சீன ஆடவர் ஒருவர் தரை மார்க்கமாக மலேசியாவுக்கு நுழைந்தபோது அவருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஜொகூர்பாருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மலேசிய சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அப்பயணிக்கு கடும் காய்ச்சலும் சளியும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அப்பயணியுடன் வந்த சுற்றுலா குழுவில் இடம்பெற்றிருந்த 17 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் கொரோனா கிருமி பாதிப்பு இல்லை என்றும் உறுதி செய்தார்.

இந்நிலையில் கிளந்தான், ஜொகூர்பாரு உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 5 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாக மலேசிய அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் தனிமைப்படுத்தப்பட்ட மலிண்டோ விமானப் பணியாளர்கள்

இதற்கிடையே மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலிண்டோ நிறுவன விமானத்தில் பணியில் இருந்த விமானப் பணியாளர்கள் ஏழு பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் (Qarantined).

கடந்த 24ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள செங்சௌ ( Zhengzhou) நகருக்குச் சென்ற மலிண்டோ விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஒரு பயணிக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்ததையடுத்து, அந்த நபர் மூலம் விமானப் பணியாளர்களுக்கும் அப்பாதிப்பு பரவியிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதி, அவர்கள் ஏழு பேரும் தனிமைப்படுத்தப் பட்டதாக சீனா தெரிவித்தது.

அக்குறிப்பிட்ட பயணி மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பே அவருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தமது விமானப் பணியாளர்கள் சீனாவில் நலமாக இருப்பதாகவும், ஏழு பேருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதாகவும் மலிண்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள ஹூபே மாகாணத்தில் இருந்து மலிண்டோ விமானம் மூலம் பயணம் மேற்கொள்பவர்கள், தாங்கள் பயணம் செய்வதற்கான உடல்நல தகுதியுடன் இருப்பதை உறுதி செய்யும் மருத்துவச் சான்றிதழை அளிக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவச் சான்றிதழ் இல்லாதவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப் போனது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையுலகுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் நான்கு திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது.

Vanguard, Detective Chinatown 3, The Rescue and Jiang Zi Ya: Legend of Deification ஆகிய நான்கு படங்களின் திரையீட்டை ஒத்தி வைத்திருப்பதாக தஞ்சோங் கோல்டன் சினிமாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தப் படங்களுக்கான நுழைவுச் சீட்டு வாங்கியவர்களுக்கு கட்டணத் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஜாக்கி சான் நடித்துள்ள Vanguard திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாக இருந்தது. இதே போல் Detective Chinatown 3 படமும் கடந்த வாரம் திரையிடப்பட இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

வதந்தி பரப்புவோருக்குப் பிரதமர் துறை எச்சரிக்கை

கடந்த மூன்று தினங்களாக வைரஸ் பரவல் தொடர்பாக சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் ஆப் மூலம் இத்தகைய தகவல்கள் பரவி வந்தன. இதனால் பொது மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசியப் பிரதமர் துறை தெரிவித்துள்ளது.

இதே போல் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை பாயும் என அரச மலேசிய காவல்படையும், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் எச்சரித்துள்ளது.

இத்தகைய வதந்திகளால் பொது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் பீதியும் ஏற்படுகிறது என்றும், இத்தகைய செயல்பாட்டை ஏற்க இயலாது என்றும் அந்த ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து மலேசிய சுகாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கைகளைத் தொடர்ந்து அவ்வப்போது கழுவ வேண்டும், முக கவசம் (face mask) அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

முக கவசங்களின் விலை திடீர் உயர்வு

இந்நிலையில் முக கவசங்களின் விலையை வணிகர்கள் திடீரென உயர்த்தியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துமாறு உள்நாட்டு வாணிப அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் மூன்று வகையான முக கவசங்கள் விற்பனையாகி வருகின்றன. அவற்றுக்கு அதிகபட்ச விலையை அரசு நிர்ணயித்திருப்பதாகவும், அதற்கும் மேல் விலையை உயர்த்தக் கூடாது என்றும் அந்த அமைச்சின் பொதுச் செயலர் மெஸ் அப்துல் அசீஸ் தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக தொகைக்கு விற்பனை செய்தால் ஒரு லட்சம் மலேசிய ரிங்கிட் அபராதம், மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: