You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் மரணங்களுடன் தொடங்கிய சீனப் புத்தாண்டு
சீனாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸால் ஹூபே மாகாணத்தில் மட்டும் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த வைரஸ் உண்டாக்கிய நோய் தொற்றால் சீனா முழுவதும் 41 பேர் இறந்திருப்பதும், 1287 பேர் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக இந்த வைரஸ் பரவத் தொடங்கியது.
வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
வுஹான் நகரில் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நகரில் புதிய மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.
1000 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை இன்னும் ஆறு நாட்களில் தயாராகும் என்றும் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
35 மண் தோண்டும் இயந்திரங்களும், 10 மண் அகற்றும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
வுஹான் சென்று திரும்பியவர்கள், திரும்பி வந்த 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகர நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சீனப் புத்தாண்டு
இது சீனப் புத்தாண்டு சமயம், எனவே பலர் தங்கள் வீடுகளுக்கு பயணம் செய்வது வழக்கம். ஆனால் ஹூபே மாகாணத்தில் பலர் இந்த புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை.
போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதுடன் வுஹானில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று சீனப் புத்தாண்டு தினம். 15 பௌர்ணமிகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்தப் புத்தாண்டுக்கு குறிப்பிட்ட எந்தத் தேதியும் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் இது அழைக்கப்படும். இந்த ஆண்டுக்கு 'எலி ஆண்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கொரோனாவைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்?
மனிதர்கள் இதுவரை கண்டிராத இந்த வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.
2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: