போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க எலும்புக்கூடுடன் பயணம் செய்த நபர்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக எலும்புக் கூடுடன் பயணம் செய்திருக்கிறார் ஒரு பயணி.

அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் காரில் ஒருவருக்கு மேல் பயணித்தால், அந்த கார்களுக்கு என தனித்தடம் உள்ளது. இதில் சாதாரண தடத்தில் இருக்கும் அளவிற்கான போக்குவரத்து நெரிசல் இருக்காது.

அவ்வாறு தனித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக 62 வயதுடைய நபர் ஒருவர், எலும்புக்கூட்டுக்கு தொப்பி அணிந்து பயணிகள் இருக்கையில் கயிற்றை கட்டி அமர வைத்திருக்கிறார்.

இந்த நபரை பிடித்த அரிசோனா பொதுப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர்.

"தேவைப்பட்டால் ரஜினியை விசாரணைக்கு அழைப்போம்"

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஒரு நபர் ஆணையத்தின் 18வது கட்ட விசாரணை கடந்த 21ம் தேதி தொடங்கி 25ஆம் தேதி மதியம் வரை நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூடு தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு சில செய்திகளை கூறி உள்ளதாக இங்கு சாட்சிகளாக ஆஜரானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

எனவே தேவைப்படும் நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்.

141 பேருக்கு பத்ம விருது

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷண் விருதும், அமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த வேணு ஸ்ரீநிவாசன், மனோகர் தேவதாஸ், பிரதீப் மற்றும் ஷாபி மஹபூப், ஷேக் மஹபூப் உள்ளிட்டோரும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுகின்றனர்.

இந்தியா வருகை தந்துள்ள பிரேசில் அதிபர்

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ இந்தியா வந்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டின் போது பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா வர அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்க பொல்சனாரூ இந்தியா வந்துள்ளார்.

"உயிர்களை பறிக்கும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது"

பல உயிர்களை பறிக்கக்கூடிய புதிய வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீனாவில் சந்திர புத்தாண்டுக்கான பொது விடுமுறை நாளில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய ஷி ஜின்பிங், "இந்த நாடு கடுமையான சூழலை சந்தித்து வருவதாக" மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சீன நகரமான வுஹானில் பரவத் தொடங்கிய புதிய வைரஸால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: