சுலேமானீ கொலை: இஸ்ரேல் மீது இரான் கோபப்படுவது ஏன்?

பட மூலாதாரம், EPA
இரானின் முக்கிய ராணுவ தளபதிகளில் ஒருவரான காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்ற பிறகு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவான பதற்ற நிலை இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக, முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ள அமெரிக்கா - இரான் இடையிலான உறவில் மோதல் போக்கு நிலவுகிறது.
சுலேமானீயை கொன்றதற்கு பழிவாங்கும் வகையில் இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது கடந்த புதன்கிழமை இரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இருப்பினும், இந்த தாக்குதலில் தங்களது வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதே சூழ்நிலையில், 'நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்' என்று வியாழக்கிழமை அன்று அமெரிக்கா விடுத்த அழைப்பை நிராகரித்த இரான், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு பின்னால் ஏதோ காரணம் இருக்கக் என்று சந்தேகத்தை கிளப்பியது.
மேலும், அமெரிக்கா எங்களுக்கு பதிலடி கொடுத்தால் இஸ்ரேல் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று இரான் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள சுலேமானீ தலைமை வகித்த இரான் புரட்சிகர ராணுவப் படை, "இந்த குற்றத்தில் நாங்கள் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பிரித்து பார்ப்பதில்லை" என்று கூறியுள்ளது.

பட மூலாதாரம், AFP
இரானுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தால் இஸ்ரேலை ஹிஸ்புல்லா படைகள் தாக்கும் என்று இரானை சேர்ந்த டன்சிம் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற ஒரு தாக்குதலுக்கு இரான் முயற்சி செய்தால் கூட அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தங்களது நாட்டிலுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதை ஒருபோதும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை இராக்கை விட்டு அமெரிக்கா வெளியேறும் பட்சத்தில், அதன் காரணமாக இஸ்ரேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கருதப்படுகிறது.
இதே போன்றதொரு சூழ்நிலை இரான், இராக், சிரியா ஆகிய நாடுகளில் தொடர்ந்தால் இறுதியில் இரானுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுக்கும் என்று ஜெருசலேம் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரான் - இஸ்ரேல் உறவு
அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்கி வருவதால் இஸ்ரேலையும் எதிரி நாடாகவே இரான் கருதுகிறது. ஆனால், ஒரு காலத்தில் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே சிறந்த நட்பு நிலவியது என்று சொன்னால் பலரும் ஆச்சர்யப்பட கூடும்.
சுமார் 30 ஆண்டுகளாக இஸ்ரேல் - இரான் இடையே நிலவி வந்த நட்புறவு இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் தலைகீழாக மாறியது. இதன் பிறகு, உடனடியாக இருநாடுகளுக்கிடையேயான நல்லுறவு முறிந்தாலும், அடுத்த பல ஆண்டுகளுக்கு ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்ந்தது.

பட மூலாதாரம், AFP
இராக்குடன் நடந்து வந்த நீண்டகால போரின்போது இரான் இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை வாங்கியதாக இஸ்ரேலை சேர்ந்த பழமையான செய்தித்தாளான ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தவுடன், இராக்கில் வாழ்ந்த யூதர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் முயற்சி செய்தது. அப்போது, இராக்கிலிருந்து யூதர்கள் குடிபெயர்வதற்கு இரான் பெரும் உதவி செய்தது.
பாலத்தீனத்தை இரண்டாக பிரித்து இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக்கும் ஐநாவின் முடிவுக்கு இராக் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதே இரான்தான் பிறகு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது ஆதரவு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஆதரவை பெறுவதற்காக அந்நாட்டில் யூதர்களின் சமூகத்தை ஏற்படுத்த இரான் விரும்பியது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இரானுக்கு இஸ்ரேல் உதவியது. அதே சூழ்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு சவால் விடுப்பதற்கு அமெரிக்காவுக்கு ஒரு கூட்டணி தேவைப்பட்டது.
நெடுங்கால பகை
இப்படிப்பட்ட சூழ்நிலையில், காசெம் சுலேமானீ விவகாரத்தில் இரானின் இலக்குகளில் ஒன்றாக இஸ்ரேல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
'Shadow Commander: Iran's Military Mastermind' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிபிசி
வெளியிட்டிருந்த ஆவணப்படம் ஒன்றில், சுலேமானீ தலைமையிலான ராணுவம் குறித்த தங்களது கருத்துகளை இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலின் இராணுத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் நிட்சான் அலோன், 2018ஆம் ஆண்டில், இரானியர்கள் கோலன் ஹைட்ஸ் பகுதியில் தங்கள் நிலையை வலுப்படுத்த முயன்றதாக கூறினார். இஸ்ரேல் கடந்த 50 ஆண்டுகளாக கோலன் ஹைட்ஸ் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கோலன் ஹைட்ஸ் பகுதியில் இரான் எடுத்த நடவடிக்கைகளுக்கு பின்னால் காசெம் சுலேமானீ உள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். சுலேமானீ குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல. வெகுகாலமாகவே சுலேமானீயை ஒரு சந்தேக பார்வையுடனே இஸ்ரேல் மட்டுமின்றி அதன் நட்பு நாடான அமெரிக்காவும் கண்காணித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிரியாவில் தாங்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும், அதற்கு பின்னால் சுலேமானீ இருப்பதாகவும் இஸ்ரேல் கூறியிருந்தது. ஹிஸ்புல்லா படையினருக்கு சுலேமானீ தலைமை தாங்கிய குட்ஸ் படைகள் உதவியதாகவும் இஸ்ரேல் மேலும் கூறியது.
ஆனால், கடந்த காலங்களை பார்க்கும்போது, இஸ்ரேல் மீது போர் தொடுப்பது குறித்து காசெம் சுலேமானீயும், இரான் ராணுவத்தின் மற்றொரு மூத்த தளபதியான ஹொசைன் சலாமி ஆகியோர் பலமுறை வெளிப்படையாகவே தனது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சுலேமானீ, சலாமி ஆகிய இருவரையுமே அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்ததாக தி ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
1998இல் குட்ஸ் படையின் தலைமை பொறுப்பை சுலேமானீ ஏற்றார். ஆனால், அதற்கு முன்பாகவே 1992இல் ஹிஸ்புல்லா படையினரை பயிற்றுவித்து அர்ஜெண்டினா தலைநகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் தாக்குதல் நடத்த உதவியதாக சுலேமானீ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதே போன்று, 2006இல் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த போரில் ஹிஸ்புல்லாவுக்கு சுலேமானீ உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகள் மீது 2010ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பின்னணியிலும் சுலேமானீ இருந்ததாக தி நியூயார்க்கர் செய்தி வெளியிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுலேமானீயை சொல்வதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுமதியளித்ததாக குவைத்தை சேர்ந்த அல் ஜரிதா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மூன்றாண்டுகளுக்கு முன்பு சுலேமானீயை கொல்லும் நோக்கத்தில் இஸ்ரேல் இருந்ததை அறிந்த அமெரிக்கா அதுகுறித்து இரானிய தலைமையை எச்சரித்ததாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












