கடும் வறட்சியில் ஜாம்பியா: 20 லட்சம் மக்களுக்கு உணவில்லை மற்றும் பிற செய்திகள்

காலநிலை மாற்றங்களின் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

உலக சராசரியைவிட தென் ஆப்பிரிக்க பகுதிகளில் வெப்பநிலை இரு மடங்கு அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால், அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 லட்சம் மக்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர்.

அதனால், பெண்கள், இலைகள் மற்றும் வேர்களை தேடி உணவை சேகரிக்கின்றனர்.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

இரண்டு கட்டங்களாக நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிகளுமே கணிசமான இடங்களில் வெற்றி பெற்று வருகின்றன.

திருநங்கை ரியா, துப்புறவு பணியாளர் சரஸ்வதி, 79 வயதாகும் மூதாட்டி வீரம்மாள் அழகப்பன், 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி, 73 வயதான மூதாட்டி தங்கவேலு ஆகியோரின் வெற்றி இதில் கவனம் பெற்றுள்ளது.

அமேசானை வீழ்த்துமா ரிலையன்ஸின் புதிய நிறுவனம்?

ஜியோ மூலமாக இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஒட்டுமொத்த போக்கையே புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்ததாக இணையதள வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளது.

ஜியோமார்ட் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய நிறுவனத்தின் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கும் ஜெஃப் பெசோசின் அமேசான் நிறுவனத்துக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

முரசொலி நில வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

தி.மு.க. நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலமா என்ற சர்ச்சை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆஜராகத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலமா என்பது குறித்து ஆராய வேண்டுமென பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரை விசாரித்த தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், இது தொடர்பாக விளக்கமளிக்க மு.க. ஸ்டாலின் ஜனவரி 7ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக வேண்டுமென கூறப்பட்டிருந்தது.

குடிசை வீட்டிலிருந்து மருத்துவம்

குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி.

இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும்.

கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் தேர்வான மாணவர்களே, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில்தான் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். அந்த வகையில், அடுத்த வருடம்தான் முஸாதிகா பல்கலைக்கழகம் செல்ல முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: