கஜகஸ்தானில் இரண்டு மாடி கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய விமானம் -12 பேர் பலி

கஜகஸ்தானில் 98 பேரை ஏற்றி சென்ற பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விபத்துக்குள்ளானதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை பெக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் விபத்துக்குள்ளானது.

குழந்தைகள் பெரியவர்கள் உள்ளிட்ட குறைந்தது 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஆறு பேர் குழந்தைகள் என கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

இந்த விமானத்தில் 93 பயணிகளும், ஐந்து விமான ஊழியர்களும் இருந்ததாக அல்மாட்டி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் கடுமையான பனிமூட்டம் இருந்ததாக அங்கு இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கூறினார்.

கஜகஸ்தானில் உள்ள பெரிய நகரமான அல்மாட்டியில் இருந்து, நாட்டின் தலைநகரான நுர்சுல்தான் நகரத்திற்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7. 22 மணிக்கு இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுக்கியது.

ஓர் இரண்டு மாடிக் கட்டடத்தின் மீது விழுந்ததுடன், இந்த விமானம் கான்கிரீட் தடுப்பு ஒன்றின் மீதும் மோதியது. இதில் எந்த தீ விபத்தும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு சேவைகள் வரவழைக்கப்பட்டு, உயிரோடு இருப்பவர்களை மீட்கும் பணி தொடங்கி இருக்கிறது.

விபத்து நடந்து பகுதியில் எடுக்கப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது. அதில் அந்த விமானத்தின் முன் பகுதி கட்டத்துடன் சிக்கிக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

1999இல் நிறுவப்பட்ட பெக் ஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் வி.ஐ.பி பயணிகளை இலக்கு வைத்து தொடங்கப்பட்டது என்று அதன் இணையதளம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் அதிபர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டவர்கள் கூறுவது என்ன?

விமானம் புறப்படும் போதே பலமான அதிர்வுகள் இருந்ததாக டெங்கிரி செய்தித்தளத்திடம் பேசிய மரல் எர்மான் கூறினார். "முதலில் நாங்கள் விமானம் தரையிரங்கிவிட்டது என்று நினைத்தோம். பின்புதான் எதன் மீதோ மோதி நின்றது தெரிய வந்தது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"மோதி விமானம் நின்றபோது விமானத்திற்குள் பெரிய கூச்சல் குழப்பங்கள் ஏதுமில்லை. விமான ஊழியர்கள் இறங்குவதற்கான வழியை திறந்துவிட்டனர்" என்றார் அவர்.

பின்னர் தான் பார்த்தபோது, விமானம் இரண்டாக உடைந்து இருந்ததாக அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: