You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரெக்ஸிட் மசோதா மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பா?
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் மசோதா மீது வரும் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாகவே, நாடாளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமர் சபாநாயகருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த சில நாட்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றவுள்ளார்.
பாரம்பரியமாக தொழிலாளர் கட்சியின் ஆதிக்கம் மிக்க தொகுதிகளாக கருதப்படும் இடங்கள் உள்பட நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் 109 புதுமுகங்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவையை விரைவில் சீரமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காலியான கலாசார செயலாளர் உள்ளிட்ட பதவிகளை போரிஸ் நிரப்பி வேண்டியுள்ளது.
வரும் வியாழக்கிழமை அன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தை முறைப்படி கூட்டும் இங்கிலாந்து ராணி, அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றுவார்.
"அரசமைப்பு சட்டப்படி, பிரெக்ஸிட் மசோதாவை நிறைவேற்றுவதற்கான செயல்பாட்டை நாடாளுமன்ற சபாநாயகருடன் கலந்தாலோசித்து தொடங்குவோம்" என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைப் போலவே இப்போதைய பிரெக்சிட் மசோதா இருக்குமா என்று அவரிடம் கேட்டபோது, "அதை தெரிந்துகொள்வதற்கு, மசோதா நிறைவேறும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். எனினும், புதிய பிரெக்ஸிட் மசோதா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
அபார வெற்றிபெற்ற போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் டிசம்பர் 12 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், மொத்தமுள்ள 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும், டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றிபெற்றன.
கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதுடன், தனக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துகொள்ளப்போவதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை அவரது மாளிகையில் சந்தித்த போரிஸ் ஜான்சன், பிரிட்டனில் ஆட்சி அமைப்பதற்கு முறைப்படி உரிமை கோரினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: