You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தோனீசிய குகையில் 44,000 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்
இந்தோனீசிய குகை ஒன்றின் சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியம் 44,000 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதி மனிதன் மற்றும் பாதி மிருகம் போன்ற உருவம் கொண்ட ஒருவர் ஈட்டி மற்றும் கயிறுகள் கொண்டு எருமை மாடு ஒன்றை வேட்டையாடுவது போன்று அந்த ஓவியம் இருக்கிறது.
இது இந்த உலகிலேயே பதிவு செய்யப்பட்டுள்ள மிகவும் பழமையான கதை என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தோனீசிய தீவான சுலவேசி என்ற பகுதியில் உள்ள ஒரு குகையில்தான் இந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தீவில் மட்டும் பழங்கால ஓவியங்கள் கொண்ட குறைந்தது 242 குகைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் மோதி என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
'போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் மோதி' - பிரிட்டனில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் கருத்து இது.
பிரதமர் நரேந்திர மோதியைப் போல பிரிட்டன் பிரதமர் பிரபலமாக இல்லை, ஆனால் கருத்தியல் ரீதியில் இருவரும் ஒன்றுபோல் இருப்பதால் இப்படி கூறுவதாக பிரிட்டன் வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.
போரிஸ் ஜான்சன் எதிர்காலத்திலும் தேர்தலில் வெற்றி பெறும் ஆற்றல் கொண்டவர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 25 ஆண்டுகளில் ஜான்சன் தனது கட்சியை முதல் முறையாக மகத்தான வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் படிக்க: போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் மோதி என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
பணத்துக்காக "தந்தையின் நண்பர்களால்" பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி
இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும், ஆண்கள் வீட்டுக்கு வந்து தன்னை பாலியல் வல்லுறவு செய்தார்கள் என்று 12 வயதான சிறுமி, மனநல ஆலோசகர்களிடம் தெரிவித்துள்ளார். சிலர் தன் தந்தைக்குத் தெரிந்தவர்கள். சிலரைத் தெரியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையார் மது அருந்துவதற்காக தனது நண்பர்களை வீட்டுக்கு வரவழைக்கத் தொடங்கியதில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பமானது என்று அந்தச் சிறுமி கூறுகிறார்.
மது போதையில் இருக்கும் ஆண்கள், தன் பெற்றோர் முன்னிலையில் தன்னை இழுத்து, தொட்டுப் பேசி, கட்டிப் பிடிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். சில நேரங்களில் அடைந்து கிடக்கும் ஒற்றைப் படுக்கை அறைக்குள் தன் தாயுடன் ஆண்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: பணத்திற்காக மகளையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய தந்தை
இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா?
மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேனின் ஓட்டுநர்கள் என்ற வகையில் இந்த இரண்டு பேரும் இருந்தனர்.
ஒரு வாகனத்தில் நபர்களை கடத்தி, பின்னர் வேறொரு வாகனத்தில் அவர்களை மாற்றி கொண்டு செல்வதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒருவர் கூறியிருந்தார்.
சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனை எதிர்ப்பு
டெல்லியின் சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனையும், பாரதிய ஜனதா கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய `பாரத் பச்சாவோ` பேரணியில் ராகுல்காந்தி உரையாற்றியபோது, என் பெயர் ராகுல் காந்தி. ராகுல் சாவர்க்கர் இல்லை. அதனால் நான் மன்னிப்பு கோர மாட்டேன். காங்கிரஸை சேர்ந்த யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்'' என பேசினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்