கருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14,000 ஆடுகள் மற்றும் பிற செய்திகள்

ருமேனியாவின் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14,000க்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்பதற்கு மீட்புதவியாளர்கள் திணறி வருகின்றனர்.

நாற்புறமும் நிலத்தில் சூழப்பட்ட கருங்கடலில் உள்ள மிடியா என்னும் துறைமுகத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்ட 'தி குயின் ஹிந்த்' என்னும் அந்த சரக்கு கப்பல் சிறிது நேரத்திலேயே கவிழ்ந்துவிட்டது.

அந்த கப்பலின் உள்ளே இருந்த சிரியாவை சேர்ந்த 22 பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, பல்லாயிரக்கணக்கான ஆடுகளை மீட்கும் பணியில் உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் ஆகியோர் அடங்கிய கூட்டு மீட்புப்படை ஈடுபட்டுள்ளது.

அருகிலுள்ள மற்றொரு கப்பலை சுற்றி நீந்திக்கொண்டிருந்த சுமார் 32 ஆடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவை பெரும்பாலும் கடலில் மூழ்கியிருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், இன்னும் பல ஆடுகள் கடலில் நீந்திக்கொண்டிருப்பதால் அவற்றை மீட்டுவிடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கப்பல் கவிழ்ந்ததற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை. ஆடுகளையும், கப்பலை மீட்கும் நடவடிக்கை முடிந்ததும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூரியன் உதிப்பதை நிறுத்தியதாக கூறிய சாமியார் தலைமறைவாக இருப்பது ஏன்?

பாலுணர்வுக் காணொளி குற்றச்சாட்டில் சிக்கிய சர்ச்சைக்குரிய தமிழக ஆன்மிக குருவான நித்தியானந்தாவின் ஆசிரமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தன்னை கடவுளின் அவதாரம் என அழைத்துக்கொள்ளும் நித்யானந்தா இரண்டு சிறுமிகளை கடத்தி சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க, நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் நிர்வாகிகள் பிராணபிரியா, தத்வபிரியா என்ற இருவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, அடுத்து தமிழ்நாடா?

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதியன்று, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த வி.கே.சசிகலா தமிழக முதல்வராகப் பதவியேற்க இருந்த நிலையில், தமிழக அரசியலில் நம்பமுடியாத திருப்பம் ஒன்று நடந்தது.

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து எதிர்பாராதவிதமாகத் தியானத்தில் ஈடுபட்ட அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்ததாகவும், சசிகலாவின் பெயரை முதல்வர் பதவிக்குத் தன்னை கட்டாயப்படுத்தி முன்மொழிய வைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க, அது தனி அணியாக உருவெடுத்தது.

தமிழர் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்களா?

இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வரும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற நிலையில், அவரது சகோதரர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டது தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பாஜக-வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை"

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் முடிவுக்கு மாற்றாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆதரவளித்து, அந்த அரசில் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் சரத் பவார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: