நாகசாகியில் போப் பிரான்சிஸ்: ”அணு ஆயுதங்களை ஒழிக்கவேண்டும்”

போப் பிரான்சிஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போப் பிரான்சிஸ்

இரண்டாம் உலகப் போரில் அணு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஜப்பான் நகரமான நாகசாகியில் இருந்து அணு குண்டுகளை ஒழிக்கும்படி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார் கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்சிஸ்.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா அணு குண்டு வீசிய இரண்டு ஜப்பான் நகரங்களில் நாகசாகியும் ஒன்று. 1945-ம் ஆண்டு நிகழ்ந்த இந்த அணு குண்டு தாக்குதலில் குறைந்தது 74 ஆயிரம் பேர் நாகசாகியில் மட்டும் இறந்தனர்.

தாய்லாந்தில் இருந்து நான்கு நாள் பயணமாக போப் பிரான்சிஸ் சனிக்கிழமை ஜப்பான் வந்து சேர்ந்தார். ஜப்பானுக்கு வருகை தரும் இரண்டாவது போப் இவர்.

இந்த தாக்குதலில் இறந்தவர்கள் நினைவாக நடந்த ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் போப் பங்கேற்றார். நாகசாகியில் போப் பேசுவதைக் கேட்க கொட்டும் மழையில் பல நூறு பேர் கூடியிருந்தனர். நாகசாகி அணு குண்டு தாக்குதலில் தப்பிப் பிழைத்த இருவர் மலர் வளையத்தை எடுத்து போப்பிடம் அளித்தனர்.

சோகம் ததும்பும் நிகழ்வில் பேசிய போப், "அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை நிபந்தனையின்றி கண்டித்தார். மனிதர்கள் மற்ற மனிதர்கள் மீது ஏற்படுத்த வல்ல பயங்கரம் மற்றும் வலியை இந்த இடம் ஆழமாக நினைவுபடுத்துகிறது" என்று தெரிவித்தார்.

அணு குண்டுகளை தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்துவதையும் அவர் விமர்சித்தார். "ஒருவரை ஒருவர் அழிப்பது பற்றிய பயமும், மொத்தமாக அழிந்துபோவது பற்றிய அச்சுறுத்தலும் உலக அமைதிக்கு உதவாது" என்று அவர் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் வீணாக்கப்படும் பணம் பற்றியும் அவர் விமர்சித்தார். அவநம்பிக்கை மிகுந்த சூழல் அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு முயற்சிகளை கெடுக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாயும், தமக்கையும்...

அணு ஆயுதத் தாக்குதலில் தப்பிப் பிழைத்த சாகுவே ஷிமோஹிரா (85) மற்றும் ஷிகேமி ஃபுகாஹோரி (89) ஆகிய இருவரும் போப்பை சந்தித்து உரையாடினர்.

என் தாயும், அக்காவும் அணு ஆயுதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். எரிந்து சாம்பலாயினர் என்று ஷிமோஹிரா கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்தது. "நீங்கள் அந்த தாக்குதலில் தப்பிப் பிழைத்திருந்தாலும், மனிதனைப் போல வாழவோ, மனிதனைப் போல சாகவோ முடியாது. அதுதான் அணு ஆயுதங்களின் பயங்கரம்" என்று அவர் கூறியிருந்தார்.

பிறகு, அணு குண்டு தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு நகரமான ஹிரோஷிமாவில், அமைதி நினைவகத்தில் நடந்த கூட்டம் ஒன்றிலும் போப் பங்கேற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: