You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்கள் பிறப்புறுப்பில் ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பால் பாதிப்பு: இழப்பீடு வழங்க உத்தரவு
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக 1350க்கும் மேலான ஆஸ்திரேலிய பெண்கள் நீண்ட காலமாக நடத்தி வந்த வழக்கில் பெண்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான எதிகான் நிறுவனம், தங்கள் தயாரிப்பான, பிறப்புறுப்பின் யோனிப்புழையில் பொருத்தப்படும் கண்ணியைப் (vaginal mesh) பெண்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை பற்றி பயனாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் எச்சரிக்கை செய்ய தவறியதாக ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் கூறியுள்ளது.
யோனிப்புழையில் பொருத்தப்படும் இந்தக் கண்ணி சிதைந்த அல்லது பலவீனமான தசைகளை சரி செய்ய பயன்படுத்தும் சிறிய வலையாகும். பெண்கள் குழந்தை பெற்றவுடன் பிறப்புறுப்பில் தசைகளுக்கு பலம் அளிக்கவும், தும்மும்போதும் இருமும்போதும் சிறு அளவில் சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் இது பொருத்தப்படும்.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சந்தித்த முக்கிய வழக்குகளில் இதுவும் ஒன்று.
சில பெண்கள் தங்கள் யோனிப்புழையில் இந்தக் கண்ணி பொருத்துதல் அறுவை சிகிசைக்கு பிறகு உடலுறவில் ஈடுபடும்போது வலி, ரத்தக்கசிவு மற்றும் அசௌகரியத்தை உணர்ந்ததாகக் கூறியிருந்தனர்.
இந்தத் தயாரிப்பைப் பற்றி எதிகான் நிறுவனம் கொடுத்திருந்த அனைத்து தகவல்களும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை, மேலும் சில தகவல்கள் தவறாக இருக்கின்றன என நீதிபதி அன்னா கேட்ஸ்மேன் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
மேலும் அவர் இதற்கான விளைவுகள் புறக்கணிக்கத் தக்கவை இல்லை, பின்விளைவுகளை ஏற்படுத்துபவையே என எதிகான் நிறுவனம் ஒப்புக்கொண்டது எனவும் அவர் கூறியிருந்தார்.
எதிகான் நிறுவனம் எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அடுத்த ஆண்டு அறிவிக்கும்.
தாங்கள் கொடுத்த ஆதாரம் சரிதான் எனவும் இதற்காக மேல்முறையீடு செய்ய விரும்புவதாகவும் எதிகான் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தாங்கள் ஆராய்ச்சி மற்றும் விற்பனையில் நியாயமாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டதாக நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்த ஜூலி டேவிஸ் எனும் பெண் இதை வரவேற்கத்தக்க தீர்ப்பு என கூறியுள்ளார். ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பெண்களை பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கினி பன்றிகளைப் போல நடத்தியுள்ளனர். அவர்கள் தயாரிப்பை பயன்படுத்தி பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு உதவும் வகையில் அந்த நிறுவனம் எதையும் செய்யவில்லை என்றும் ஜூலி டேவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய பெண்கள் யோனிப் புழையில் கண்ணி பொருத்துதலால் உண்டான பாதிப்பால் பல தசாப்தங்களாக உணரும் வலிக்கும் வேதனைக்கும், நாடு முழுவதும் உள்ள பெண்களிடம் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு கேட்டது.
குவியும் வழக்குகள்
ஓப்பியாய்ட் (கஞ்சா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள்) வலி நிவாரணி மருந்துகள் தொடர்பான வழக்கையும் சேர்த்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பல பில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழக்கை சந்தித்து வரும் நிலையில் சமீபத்திய தீர்ப்பே அந்த நிறுவனத்துக்கு கூடுதல் சிக்கலாக உள்ளது.
ஏற்கனவே இடுப்பறை பகுதியில் பொருத்தப்படும் கண்ணி (pelvic mesh) பாதிப்பை உண்டாக்கியது தொடர்பாக அக்டோபர் மாதம் 41 அமெரிக்க மாகாணங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்துக்கு 117 மில்லியன் டாலர் இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டது
இது மட்டுமல்லாமல் கனடா மற்றும் ஐரோப்பாவில் தங்கள் தயாரிப்புகள் உண்டாக்கிய பாதிப்புகள் தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.
இது தவிர ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பௌடரால் புற்றுநோய் ஏற்படுகிறது என பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆன்டி சைக்கோடிக் மருந்து உட்கொண்டால் மார்புச் சதை வளரும் என எச்சரிக்கை தராததால் ஒருவருக்கு 8 பில்லியன் டாலர் இழப்பீடு கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்நிறுவனம், இவ்வளவு வழக்குகள் இருந்தபோதிலும் இந்த காலாண்டு விற்பனையில் 20.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது 2018ல் இதே காலாண்டில் ஈட்டிய வருவாயைவிட 1.9% அதிகமாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்