You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவின் உளுரு மலை ஏற்றத்திற்கு தடை - கடைசி நாளில் மலையேற குவிந்த கூட்டம்
ஆஸ்திரேலியாவில் ஏயர்ஸ் ராக் என பரவலாக அறியப்பட்ட உளுரு எனும் ஒரு குன்று சனிக்கிழமை முதல் வெளியாட்கள் செல்லவே தடை செய்யபட்ட இடமாக மாறிவிடும்.
நீண்ட காலமாக இந்த மலைக் குன்றின் மீது ஏற வேண்டாம் என அனான்கு பூர்வகுடி இன மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மலையை புனிதமாக கருதி பாதுகாத்தும் வந்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு, உளுரு பகுதிக்கு வருகை தந்தவர்களில் 16% சுற்றுலா பயணிகள் மட்டுமே மலையேற்றத்தில் ஈடுபட்டனர். ஆனால் தடை அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்திய வாரங்களில் ஏராளமானோர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளிகிழமை மலை பகுதியில் கடும் புயல் தாக்கியதால், பல மணி நேரம் காத்திருந்து, அலுவலர்கள் மலையேற பாதுகாப்பான சூழல் நிலவுகிறது என உறுதி செய்தவுடன் நூற்றுக்கணக்கானோர் தாமதமாக மலையேறத் துவங்கினர்.
மலையேற்றம் தடை செய்யப்பட காரணம்
உளுரு மலை தளத்தின் ஆன்மிக முக்கியத்துவம், பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் காரணங்களுக்காக 2017ம் ஆண்டு உளுரு-கட்டா ஜுடா தேசிய பூங்கா வாரியம் மலையேற்றத்தை தடை செய்ய ஏகமனதாக வாக்களித்தனர்.
அனான்கு இனத்தை சேர்ந்த ஒருவர் ''உளுரு மிகவும் புனிதமான இடம். அது எங்கள் தேவாலயம் போன்றது," என பிபிசியிடம் கூறினார்.
உலகெங்கிலும் உள்ளவர்கள் இங்கு வந்து மலை ஏறுகிறார்கள். அவர்களுக்கு மலையின் மேல் மரியாதை இல்லை என ரமேத் தாமஸ் கூறினார்.
தளத்தின் புனிதத்தன்மை அறிந்து சில சுற்றுலா பயணிகள் மலை ஏற வேண்டாம் என கருதி மலையின் அடிவாரத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளனர்.
இது ஒரு மலை. இதை ஏறியே ஆக வேண்டும் என கடந்த வாரம் மலை ஏறிய ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த மலை பலருக்கு நல்ல நினைவுகளை அளித்திருக்கும். ஆனால் மலையேற்றத்தை தடை செய்வது பூர்வகுடி மக்களின் பல வருட துயரத்தை நீக்கும்.
கடந்த வாரம் உளுருவின் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பின. பல சுற்றுலா பயணிகள் அனுமதி இன்றி பல இடங்களில் தங்குகின்றனர் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த மலையேற்ற தடை, தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஒருபோதும் பாதிக்காது என சுற்றுலாத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கடந்த 1950ஆம் ஆண்டு, மலையேற்றத்தின்போது விபத்து ஏற்பட்டு, வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 2018ல் ஜப்பானை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மிகவும் நீளமான பாறை ஒன்றை என்ற முயன்றபோது உயிரிழந்தார்.
உளுரு மலை 348 மீட்டர் உயரம் கொண்டது, மிகவும் சறுக்கிவிடுகின்ற தன்மை கொண்டது.
ஆரம்பத்தில், உலகம் வடிவமின்றி இருந்தபோது இந்த வெற்றிடத்திலிருந்து மூதாதையர்கள் தோன்றி நிலம் முழுவதும் பயணித்து, அனைத்து உயிரினங்களையும் வடிவங்களையும் உருவாக்கினார்கள் என அனான்கு மக்கள் நம்புகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்