You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியா: புலிகளின் ஆதரவாளர்கள் கைது - கணவர்களை விடுவிக்க பெண்கள் போராட்டம்
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக - மலேசியாவிலிருந்து
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன.
மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.
இந்நிலையில், மலாக்கா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி தனது கணவரை விடுவிக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, கோலாலம்பூரில் உள்ள மலேசிய காவல்துறை தலைமை அலுவலகமான புக்கிட் அமானுக்கு எதிரே சாலையோரம் அமர்ந்து தனது போராட்டத்தையும் துவங்கியுள்ளார் உமாதேவி.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள எஸ். சந்த்ரு, வி. சுரேஷ்குமார் ஆகியோரின் மனைவியரும் உமாதேவியுடன் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய உமாதேவி, தமது கணவர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் எண்ணமில்லை என்றார்.
தமது கணவர் சாமிநாதன் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அனுதாப கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்ததுடன் அவருக்கு எந்தவிதத் தொடர்புகளும் இல்லை என்றும் உமாதேவி தெரிவித்தார்.
அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பது குற்றமா? என்று கேள்வி எழுப்பிய அவர், தந்தை எங்கே என்று கேட்கும் தனது குழந்தைகளிடம் பொய் சொல்லி நிலைமையைச் சமாளிக்க இயலவில்லை என்கிறார்.
"கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் மலாக்கா மாநிலத்தில் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கம் அமைய வேண்டும் என்பதற்காக எனது கணவரும், அவருடன் சேர்த்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்ற இருவரும் (எஸ். சந்த்ரு, வி. சுரேஷ்குமார்) கடுமையாக உழைத்தனர். இன்று அவர்களுக்கே இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளது”.
"எந்தச் சட்டத்தை அகற்ற வேண்டும் என நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) வாக்குறுதி அளித்ததோ, இன்று அதே சட்டத்தின் கீழ் 12 பேர் கைதாகியுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என் கணவருக்கே இப்படியொரு நிலைமை என்றால் சாமானியர்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். நாளை மற்றவர்களுக்கும் இதே கதி ஏற்படலாம். இவற்றுக்கெல்லாம் பிரதமர் துன் மகாதீர் பதிலளித்தே தீர வேண்டும்," என்றார் உமாதேவி.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்கக் கோரி, கோலாலம்பூரில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், “கைது செய்யப்பட்டவர்களை தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு விடுவிப்பது சாத்தியமல்ல” என்று மலேசிய காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தின்போது கைதானவர்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்திருப்பது தமக்கு வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்ட அவர், “எனினும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் வேறு வழியில்லை” என்றார்.
கைதானவர்களின் குடும்பத்தார் உள்பட அனைத்துத் தரப்பினரும் விசாரணை முழுமையடையும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் நல்லமுறையில் கவனித்துக் கொள்ளப்படுவர் என்றும், சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமை நிலைநாட்டப்படும் என்றும் காவல்துறை தலைவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் கோலாலம்பூரில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்கிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், இம்மூன்று பெண்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்