துருக்கி ராணுவத்தை சமாளிக்க சிரியா அரசுடன் சமரசம் செய்யும் குர்து கிளர்ச்சியாளர்கள்

துருக்கியின் எல்லைத் தாண்டிய தாக்குதலை நிறுத்த சிரியா அரசு தங்கள் படையை அனுப்ப ஒப்புக்கொண்டதாக சிரியாவில் வாழும் குர்து கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் வடக்கு பகுதிக்கு அரசுப் படைகள் அனுப்பப்படுவதாக சிரியா ஊடகங்கள் சில முன்னதாக தெரிவித்தன.

அமெரிக்கா தங்கள் படைகளைத் திரும்பச் சொன்னதன் விளைவாக, அந்த பகுதியில் துருக்கியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கடந்த வாரம் குர்து இன கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து எல்லைத் தாண்டி துருக்கி படைகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் குர்து இன கிளர்ச்சியாளர்களை வழிநடத்தும் சிரியா ஜனநாயக படையின் மீது குண்டுகளை வீசியது துருக்கி. இதனால் துருக்கி சிரியா எல்லையில் இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியது.

இதில் டஜன் கணக்கில் குடிமக்கள் மற்றும் இரு படைகளின் வீரர்களும் இறந்துள்ளனர்.

இந்த தாக்குதலைச் சமாளிக்க குர்து இன கிளர்ச்சியாளர்கள் வழி நடத்தும் சிரிய ஜனநாயக படை, ஒப்பந்தத்தின்படி சிரியா அரசு அதன் படையை எல்லைப்பகுதியில் நிறுத்திவைக்கவுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த படையைக் களமிறக்கியது சிரியா ஜனநாயகப் படைக்கு நடந்து தாக்குதலுக்குப் பதில் அளிப்பதற்கும் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளை விடுவிப்பதற்கும் உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

துருக்கி ஏற்கனவே கைப்பற்றிய ஆஃப்ரின் போன்ற நகரங்களை விடுவிக்கவும் இது வழிவகுக்கும் என சிரிய ஜனநாயகப் படை கூறியுள்ளது.

இந்த ஒப்பந்தம் குர்துகளின் கூட்டணியின் ஒரு முக்கிய மாற்றம் ஆகும். அதுவும் குறிப்பாக அமெரிக்காவின் உதவியை இழந்த பிறகு நடக்கும் முக்கிய கூட்டணி மாற்றம் ஆகும்.

இதுவரை சிரிய அரசு இதைக் குறித்து எதுவும் கூறவில்லை.

ஆனால் சிரிய ஜனநாயகப் படையின் தலைவர் மஸ்லூம் அப்டி ஃபாரின் பாலிசி என்ற இதழுக்கு எழுதிய கட்டுரையில் சிரிய அரசு மற்றும் ரஷிய கூட்டாளிகளுடன் சில வலுமிக்க சமரசங்கள் இருக்கும் என எழுதியுள்ளார்.

அவர்களின் உறுதிகளை நம்பவில்லை. உண்மையில் யாரை நம்புவது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த சமரசங்களா? மக்களா? எனப் பார்க்கும்போது மக்களின் வாழ்வைத்தான் நாங்கள் தேர்வு செய்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

துருக்கியின் தாக்குதலுக்கு வழி வகுக்கும் வகையில் அமெரிக்கா தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அமெரிக்கா செய்ததை சிரிய ஜனநாயக படை அந்த நேரத்தில் 'முதுகில் குத்தியதாக' கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :