ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம் - பிபிசி களஆய்வு

ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தினமும் சராசரியாக 74 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக பிபிசி கண்டறிந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டு கால போருக்குப் பிறகு படைகளை வாபஸ் பெறுவதற்கு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதை அடுத்து, ஏறத்தாழ நாடு முழுவதும் இடைவிடாமல் நடக்கும் வன்முறைகளால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
611 சம்பவங்களில் 2,307 பேர் கொல்லப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
பிபிசி கண்டறிந்துள்ள இறப்புகளின் எண்ணிக்கைகள் எந்த அளவுக்கு நம்பகமானவை என்று தாலிபான் அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கேள்வி எழுப்பியுள்ளன.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சண்டையில் ஈடுபட்டவர்கள் - அதில் எதிர்பார்தததைவிட அதிகமானோர் தாலிபான் தீவிரவாதிகள் - ஆனால் இறந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பொது மக்களாக உள்ளனர்.
இது தவிர 1,948 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மரணங்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் களத்தில் உள்ள நிலவரத்தின் சிறிய அடையாளம் தான்.
இருந்தாலும், அமெரிக்காவின் முக்கியமான வெளிநாட்டுக் கொள்கையை நிறைவேற்றும் வகையில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்திருப்பதால், மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைக் காட்டுவதாக அது உள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்னதாக, தாலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஓராண்டாக நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். அதை திரும்பத் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதை மறுத்துவிட முடியாது.
இருந்தாலும் போர்நிறுத்தம் பற்றி எந்தப் பேச்சும் கிடையாது. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னும் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நிலைமை இன்னும் மோசமாகும் என்ற அச்சம் நிலவுகிறது.
31 நாட்களில் இறப்புகள்

வன்முறைகள் நிறைந்த ஆகஸ்ட் முதல் வாரத்துக்குப் பிறகு, இஸ்லாமியர்களின் பக்ரீத் திருநாளை ஒட்டி தாலிபான்கள் மற்றும் அரசுப் படையினர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் போர் நிறுத்தம் கடைபிடித்தனர்.
ஆனாலும், விடுமுறைக் காலத்தில் 90 பேர் இறந்திருப்பதை பிபிசி உறுதிப்படுத்தியது. ஆகஸ்ட் 10 மாலையில் இருந்து ஆகஸ்ட் 13 சூரியன் மறையும் நேரம் வரையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அதிகபட்ச மரணங்கள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிகழ்ந்தன. அன்று 162 பேர் கொல்லப்பட்டதாகவும், 47 பேர் காயமடைந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது. முக்கியமாக தலிபான் தீவிரவாதிகளின் விமானத் தாக்குதலில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆனால், ஆகஸ்ட் 18 பொது மக்களுக்கு மிக மோசமான நாளாக இருந்தது. அன்றைய தினம் 112 பேர் உயிரிழந்தனர். காபூலில் திருமண நிகழ்ச்சியில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர், 142 பேர் காயமடைந்தனர்.
உழைக்கும் மக்களை அதிகம் கொண்ட அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மிர்வாய்ஸ் என்ற தையல் தொழிலாளி. திருமணத்துக்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்திருந்தார். அந்த நாள்தான் அவருடைய வாழ்வில் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கும்.
மாறாக, அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். அவருடைய புதிய மனைவி பல உறவுகளையும், ஒரு சகோதரனையும் இழந்துவிட்டார். தனது திருமண உடையையும், திருமண ஆல்பத்தையும் எரித்துவிட விரும்புவதாக இப்போது அந்த மணமகள் கூறுகிறார்.
இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
காபூலில் நடைபெற்ற திருமணத்தில் இஸ்லாமிய அரசு குழுவினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டனர். 142 பேர் காயமடைந்தனர்.

அதிகம் பாதிக்கப்பட்டது யார்?
2001ல் இருந்து தலிபான்கள் ஒருபோதும் பலம் மிக்கவர்களாக இருந்தது கிடையாது. ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த இறப்புகள் என பிபிசி உறுதி செய்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் - அது பெரிய எண்ணிக்கை, ஆச்சரியத்தை ஏற்படுத்தும் எண்ணிக்கை அது.
இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அமைதிப் பேச்சுகளின்போது தலிபான்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும், அமெரிக்கா தலைமையிலான படைகள் விமானத் தாக்குதலை அதிகரித்துள்ளன என்பதும் இதில் அடங்கும். இரவு நேரங்களில் நடந்த பதிலடி தாக்குதல்களில் நிறைய தலிபான்களும், பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளில் எவ்வளவு தீவிரவாதிகளை தலிபான் இழந்துள்ளது என்ற எண்ணிக்கை தெரியவில்லை. அவர்களிடம் சுமார் 60,000 பேர் ஆயுதம் ஏந்தி போரிடும் நிலையில் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த மாதத்தில் 1,000 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் ``ஆதாரமற்ற புகார்'' என்று கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது தலிபான் அமைப்பு. ``அவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்பு இருந்தது'' என்பதை நிரூபிக்க ஆவணங்கள் ஏதும் இல்லை என்று ஓர் அறிக்கையில் தாலிபான் அமைப்பு கூறியுள்ளது.
``காபூல் அரசின் உள்நாட்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் தினமும் மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் அடிப்படையில்'' பிபிசி அறிக்கை அமைந்துள்ளது என்றும் தாலிபான் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழப்புகள் பற்றி ஆப்கான் பாதுகாப்புப் படையினரின் தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது - எனவே ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த மரணங்கள் என்ற எங்களுடைய கணக்கெடுப்பு குறைவானதாகவும் இருக்கலாம். 2014 ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 45,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கடந்த ஜனவரி மாதம் ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் சேகரிப்பு ``தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், கள நிலவரத்தின் அடிப்படையில் இன்னும் தீவிரமான நிலையில் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்'' என்றும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
கொல்லப்பட்டோரில் ஐந்தில் ஒருவர் குடிமக்கள்

ஆகஸ்ட் மாதத்தில், பொது மக்கள் 473 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 786 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
``இந்த மோதல்களால் பொது மக்களுக்கு பேரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன'' என்று ஆப்கனில் உள்ள ஐ.நா. மனித உரிமைப் பிரிவின் (யுனாமா) தலைவர் பியோனா பிரேசர் கூறியுள்ளார்.
``பூமியில் வேறு எந்தப் பகுதியைக் காட்டிலும், ஆப்கானிஸ்தானில் ஆயுதம் தாங்கிய மோதல் சம்பவங்களால் அதிக அளவில் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்பதை ஐ.நா. தகவல்கள் காட்டுகின்றன.''
``பதிவு செய்யப்பட்டுள்ள பொது மக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை மனவருத்தம் தரும் அளவுக்கு அதிகமானதாக இருந்தாலும், தீவிர சரிபார்த்தல்கள், வெளியிடப்பட்ட எண்ணிக்கைகள் ஆகியவை, உண்மையான நிலவரத்தை வெளிக்காட்டுவதாக நிச்சயமாக இல்லை.''
அமெரிக்காவும் ஆப்கான் தீவிரவாதிகளும், பொது மக்கள் உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை வழக்கமாக மறுத்து வருகின்றனர் அல்லது வெளியில் தெரிவிக்க மறுக்கின்றனர்.

இந்த மோதல் என்ன மாதிரியாக இருக்கிறது?
வடக்கில் உள்ள குண்டுஸ் நகரில் நடந்த தாக்குதல் அல்லது காபூல் திருமணத்தில் நடந்த தாக்குதல் போன்ற பெரிய நிகழ்வுகள் மட்டுமே சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றன.
அதுதவிரவும் ஆப்கானில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது, சிறிய அளவில் வன்முறைகள் நடக்கின்றன, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், தாலிபான்களுக்கும் இடையில் அந்த மோதல்கள் நடக்கின்றன.
நெருங்கி நின்று மோதுவதில் அதிக உயிரிழப்புகள்

ஆகஸ்ட் மாதத்தில் நடந்த உயிரிழப்புகளை, 34 மாகாணங்களைக் கொண்ட ஆப்கானில் மூன்று மாகாணங்களில் மட்டும் பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த மரணங்களில் பத்தில் ஒரு மரணம் தாலிபான்கள் கட்டுப்பாட்டின் மையமாக உள்ள பகுதியாகக் கருதப்படும் காஜ்னி மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. பாதுாப்புப் படையினர் நடவடிக்கையின் இலக்காக இந்தப் பகுதி உள்ளது.
மோசமான நிச்சயமற்ற சூழ்நிலையில் வாழ்வதாக ஆப்கான் பொது மக்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வன்முறை மோதல்

உருஜ்கான் மாகாணத்தைச் சேர்ந்த மோஹிபுல்லா ன்பவர் காந்தகாரின் முக்கிய மருத்துவமனையில் பிபிசியிடம் பேசினார். அவருடைய சகோதரரின் தோள்பட்டையில் இருந்து துப்பாக்கிக் குண்டு ஒன்றை டாக்டர்கள் அகற்றிய நிலையில், அவர் நம்மிடம் பேசினார்.
``எங்கள் பகுதியில் எப்போது தேடுதல் வேட்டை நடந்தாலும், சாதாரண மக்கள் வெளியில் நடமாட முடியாது. அப்படிச் சென்றால் அமெரிக்க அல்லது ஆப்கன் படையினர் அவர்களைச் சுடுவார்கள்' என்று அவர் கோபத்துடன் கூறினார்.
``விரும்பிய இடங்களில் எல்லாம் அவர்கள் குண்டு வீசுவார்கள். எங்கள் பகுதியில் அனைத்து வீடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.''
உலகில் மிக மோசமான உள்நாட்டுப் போர்?
ஆப்கானிஸ்தானில் சுமார் நாற்பது ஆண்டுகளாகப் போர் நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை நிலவுகிறது.
உலகில் மிக மோசமான போர் - தொடர்பான மரணங்கள் நிகழும் பகுதியாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று ஆயுதம் ஏந்திய போராட்டம் நடைபெறும் இடம் & நிகழ்வு தகவல் திட்ட (ACLED) அமைப்பு கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கை செய்தது.

2019 ஆம் ஆண்டுக்கான மரண எண்ணிக்கைகளைப் பார்த்தால், அந்த இடத்தை ஆப்கானிஸ்தான் தக்கவைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ACLED தகவல் தொகுப்பின்படி பார்த்தால், சிரியா அல்லது ஏமன் நாடுகளில் நிகந்த மரணங்களைவிட ஆகஸ்ட்டில் ஆப்கானிஸ்தானில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
2019 ஜூன் மாதம் உலகில் அமைதி நிலைமை மிக மோசமாக இருந்த பகுதி ஆப்கானிஸ்தான் என்று உலகளாவிய அமைதிக் குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி எப்படி தகவல்களைச் சேகரித்தது?
2019 ஆகஸ்ட் 1 முதல் 31 வரையில் ஆப்கானிஸ்தானில் 12,00க்கும் மேற்பட்ட வன்முறை நிகழ்வுகள் குறித்து பிபிசி தகவல்கள் சேகரித்தது.
பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திலும் தொடர்புடையவர்களைப் பற்றி பிபிசி ஆப்கான் செய்தியாளர்கள் விசாரித்தனர். பெரும்பாலும் பெரிய செய்திகளில் இடம் பெறாத சம்பவங்களையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டனர். தகவல்களை சரி பார்க்கவும், தொடர்ந்து கவனித்து விசாரிக்கவும் ஆப்கான் முழுக்க களத்தில் உள்ள குழுவினருடன் பிபிசி தொடர்பு கொண்டது.
அரசு அதிகாரிகள், சுகாதாரத் துறை பணியாளர்கள், மலைவாழ் சமூகத்தில் மூத்தவர்கள், உள்ளூரில் குடியிருப்பவர்கள், நேரில் பார்த்தவர்கள், மருத்துவமனைப் பதிவேடுகள் மற்றும் தாலிபான் வட்டாரங்களிலும் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன.
குறைந்தபட்சம் இரண்டு தகவல்கள் உறுதி செய்தால் மட்டுமே, அந்த நிகழ்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மருத்துவமனை பதிவேடுகளில் உள்ள மரணங்களின் எண்ணிக்கைகளை, இரண்டாவது தரப்பில் உறுதிப்படுத்தும் அவசியம் இல்லாமல் அப்படியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
மரண எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்ட குறைந்தபட்ச எண்ணிக்கை தான் பதிவு செய்யப்பட்டது. தோராயமாக சொல்லும்போது (உதாரணம் 10 முதல் 12 வரை என்றால்), அதில் குறைந்தபட்ச எண்ணிக்கை தான் நம்பகமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஒரே சம்பவம் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்தால், அவற்றில் குறைவான எண்ணிக்கை மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு, மற்றவை ஒதுக்கப்பட்டன. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான பதிவுகள் விலக்கப்பட்டுள்ளன. எனவே உண்மையான தாக்குதல் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












