You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை கொள்ளை
பிரிட்டனில் உள்ள ப்ளேனம் அரண்மனையில் நடைபெற்ற கொள்ளையில் 18 கேரட் தங்க கழிவறை ஒன்று திருடப்பட்டுள்ளது.
பிரிட்டன் நேரப்படி நேற்று, சனிக்கிழமை, அதிகாலை 4.50 மணிக்கு ஆக்ஸ்ஃபோர்டுஷேர் பகுதியில் உள்ள இந்த அரண்மனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று, இந்த கலைப்பொருளை திருடி சென்றுள்ளதாக தேம்ஸ் பள்ளதாக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
'அமெரிக்கா' என்ற இந்த கழிவறையைப் பார்வையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், 66 வயதான ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கழிவறை கட்டடத்தோடு பொருத்தப்பட்டிருந்ததால், இந்த திருட்டு சம்பவம் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவ்விடத்தில் நீர் அதிகளவு தேங்கிவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை திறக்கப்பட்ட இத்தாலிய கருத்தியல் கலைஞர் மௌரிசியோ கட்டெலானால் நடத்தப்படும் கண்காட்சியின் ஒரு பகுதி இதுவாகும்.
18ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அரச மாளிகை உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த ஊருமாகும். விசாரணை நடைபெற்று வருவதால் இப்போது இந்த மாளிகை மூடப்பட்டுள்ளது.
இந்த கலைப்பொருளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் திருப்தி அடைவதாக தற்போதைய மார்ல்பரோவின் கோமகனின் ஒன்றுவிட்ட சகோதரர் எட்வர்ட் ஸ்பென்சர்-சர்ச்சில் கடந்த மாதம்தான் தெரிவித்திருந்தார்.
நீண்ட வரிசையை தவிர்ப்பதற்காக இந்த மாளிகையின் அரியணையை மூன்று நிமிடம் பயன்படுத்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குற்றம் புரிந்த கும்பல் இந்த திருட்டு சம்பவத்திற்கு குறைந்தது இரண்டு வாகனங்களை பயன்படுத்தியிருக்கலாம் என நம்புவதாக கூறுகின்ற காவல்துறை, முழு விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்கின்றது.
மூடப்பட்டுள்ள அரண்மனை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று ப்ளேனம் அரண்மனை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த திருட்டு சம்பவத்தால் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கும் மாளிகையின் தலைமை செயலதிகாரி டோமினிக் ஹாரே, இதில் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதால் நிம்மதி அடைவதாக கூறியுள்ளார். மேலும் அவர் அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கலைஞர் மௌரிசியோ கட்டெலான் உருவாக்கிய இந்த சிறந்ததொரு கலைப்பொருள் இந்த திருட்டால், எவ்வித சேதமும் அடையாமல் திரும்ப வந்து சேரும் என்று நம்பிக்கையோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2017ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த தங்க கழிவறையை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கைதாகியுள்ள சந்தேகநபர் தற்போது காவல்துறை வசம் உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்