You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரெக்ஸிட் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்பி அமைச்சர் பதவியில் இருந்து விலகல்
குடும்ப விஸ்வாசம், தேசிய நலன் ஆகிய இரண்டுக்கும் இடையில் இழுபடுவதாக கூறி தமது அமைச்சர் பதவியையும், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தம்பி ஜோ ஜான்சன்.
வணிகத் துறை அமைச்சரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யுமான ஜோ தமது பணியில் தீர்க்க முடியாத நெருக்கடி இருந்துவந்ததாக குறிப்பிட்டார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டுமா, விட்டு விலகவேண்டுமா என்பதற்காக 2016ல் நடத்தப்பட்ட பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்கவேண்டும் என்று வாக்களித்தார் ஜோ. அதே நேரம், அவரது சகோதரர் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாகப் பிரசாரத்தை முன்னின்று நடத்தினார்.
பிரதமர் தெரீசா மே தயாரித்த வரைவு பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்பே இவர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரது அண்ணன் போரிஸ் ஜான்சனை கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமராக்கிய பிறகு இவர் மீண்டும் அமைச்சரானார்.
தற்போது ஜோவின் பதவி விலகல் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் இல்ல செய்தித் தொடர்பாளர் ஒருவர், "ஜோ ஜான்சனின் சேவைக்கு பிரதமர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார். அவர் அறிவில் சிறந்த அமைச்சராகவும், அற்புதமான எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்த விவகாரம் ஜோவுக்கு எளிமையான ஒன்றாக இருந்திருக்காது என்பதை ஓர் அரசியல்வாதியாகவும், சகோதரராகவும் பிரதமர் புரிந்துகொள்கிறார். அவரைத் தேர்ந்தெடுத்த ஆர்பிங்டன் மக்களுக்கு அவரைவிட சிறந்த பிரதிநிதி இருக்கமுடியாது" என்று தெரிவித்தார்.
ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட்டில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சிகளை ஆதரித்த கன்சர்வேட்டிவ் கட்சியின் 21 எம்.பி.க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஜோ பதவி விலகுவது நம்பமுடியாத அளவுக்கு முக்கிய நேரத்தில் நிகழ்ந்திருப்பதாக பிபிசி அரசியல் பிரிவு ஆசிரியர் லாரா குயன்ஸ்பெர்க் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமது சக எம்.பி.க்கள் நீக்கப்பட்டது குறித்து ஜோ அதிருப்தி அடைந்திருந்தார் என்று தெரியவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பேரன் சர் நிக்கோலஸ் சோமெஸும், 49 ஆண்டுகளாக அந்தக் கட்சி எம்.பி.யாக இருக்கும் கென் கிளார்க் ஆகியோரும் அடங்குவர்.
மறு தேர்தல் முடிவு குறித்து திங்கள் கிழமை மீண்டும் வாக்கெடுப்பு
பிரெக்ஸிட் சிக்கல் காரணமாக, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வைத்த திட்டத்தை நாடாளுமன்றம் புதன்கிழமை நிராகரித்த நிலையில், மறுதேர்தல் தீர்மானத்தின் மீது மீண்டும் திங்கள்கிழமை வாக்களிப்பதற்கு எம்.பி.க்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்