அமெரிக்க சிறைச்சாலையில் தன்னந்தனியே குழந்தை பெற்றெடுத்த பெண் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவின் கொலராடோவில், எவ்வித மருத்துவ உதவியும் இன்றி தான் தனியே சிறைச்சாலையில் குழந்தையை பெற்றெடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ள பெண் கைதி ஒருவர் உள்ளூர் நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு, மாவட்ட சிறையில் "கழிப்பறையிலிருந்து சில அடி தூரத்தில் இருந்த, குளிர்ந்த கடினமான மேசையில்" தனது குழந்தையை பிரசவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக டயானா சான்செஸ் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

தான் பிரசவிக்கும் சூழ்நிலையில் இருப்பதை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் வேண்டுமென்றே அலட்சியம் செய்து விட்டதாக அவர் கூறுகிறார்.

ஆனால், இதுகுறித்து பிபிசியிடம் பேசிய டென்வர் பகுதி காவல் அதிகாரிகள், இதுதொடர்பாக தாங்கள் ஆய்வு மேற்கொண்டபோது, சிறைச்சாலை அதிகாரிகள் சரியான முறையில் செயலாற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், டென்வர் நகரம் மற்றும் மாவட்டம், டென்வர் சுகாதார மருத்துவ மையம் மற்றும் ஆறு நபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவிடப்பட்டுள்ளது. அவர்கள் "தங்களது சட்டரீதியிலான மற்றும் தார்மீக கடமையை பூர்த்தி செய்ய தவறிவிட்டனர்" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம், அதாவது தனது 26ஆவது வயதில், அடையாள திருட்டு குற்றச்சாட்டின் கீழ் டயானா சான்செஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாய் வங்கதேச நாணயத்தைவிட மதிப்பு குறைந்து விட்டதா?

இந்திய நாணயமான 'ரூபாய்' வங்கதேசத்தின் நாணயமான 'டாக்கா'வை விட மிகவும் மதிப்பு குறைந்து விட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 72 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வங்கதேசத்தின் நாணயமான டாக்காவை விட, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக நூற்றுக்கணக்கான பதிவுகளும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதற்கு சமூக ஊடகங்களில் பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிலர் இந்த இரு நாட்டு நாணயங்களுக்கான வரைகலை படங்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.

இந்தியப் பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி தந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் உதவுமா?

இந்திய ரிசர்வ் வங்கி தமது உபரி நிதியில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டது, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், இந்தியப் பொருளாதாரத்தில் தற்போதுள்ள சிக்கல்களை இது தீர்க்குமா என்பது குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானத்தம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு (reserve) பணத்திலிருந்து ஒரு தொகையை அரசுக்கு அளிக்கும்படி கேட்டார்கள். அதற்கு அவர் மறுத்தார்.

வெதர்மேன் பேட்டி: நீலகிரி, வேலூரில் பெய்தது 'கிளவுட் பர்ஸ்ட்' மழையா?

கடந்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது என மழைப்பொழிவு குறித்து பல செய்திகள் வெளியாகின. இந்த அதிகபட்ச மழை கிளவுட் பர்ஸ்ட் மழையாக இருக்கலாம் என சமூகவலைதளங்களில் பேசப்பட்டது.

சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் வானிலை பதிவுகளை சமூகவலைத்தளத்தில் பதிவிடும் தமிழ்நாடு வெதர் மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜானிடம் இது குறித்து விரிவாக பேசினோம்.

பியூஷ் மனுஷ் மீது பா.ஜ.கவினரின் தாக்குதல்: என்ன நடந்தது?

சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து விளக்கம் கேட்க முற்பட்ட சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷ் அங்கிருந்தவா்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. பியூஷ் மனுஷ் ஏன் அங்கு சென்றார்?

சேலத்திலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளரான பியூஷ் மனுஷ் புதன்கிழமையன்று மாலையில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தார்.

அதில், "இன்று மாலை ஐந்து மணியளவில் பொருளாதாரம், காஷ்மீர் பிரச்சனை மற்றும் மேலும் பல பிரச்சனைகள் குறித்து கேட்பதற்காக சேலத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்குச் செல்லவிருக்கிறேன். FB live" என்று குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: