You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூழலியல்: பூவுலகின் நலனுக்காக போராடிய சுற்றுச்சூழல் அமைச்சர் உயிர் நீத்தார் மற்றும் பிற செய்திகள்
பூவுலகின் நலனுக்காக தீவிரமாக போராடியவரும், பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான கினா லொபெஸ் தனது 65வது வயதில் மரணமடைந்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது சுரங்க தொழில் மற்றும் குவாரிகளுக்கு எதிராக கடுமையான நிலைபாடு எடுத்தவர் இவர். அதுமட்டுமல்ல குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும் இவர் போராடி வந்தார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் 23 சுரங்கங்களை மூடினார். ஆனால், சுரங்க தொழில் முதலாளிகள் இந்த நடவடிக்கைக்கு எதிராக பிரசாரம் செய்தனர். அதாவது சுரங்கங்கள் மூடப்படுவதால் 1.2 மில்லியன் மக்கள் வேலை இழப்பார்கள் என்றனர். இதனை அடுத்து அந்த சுரங்கங்கள் திறக்கப்பட்டன. தான் பதவியில் இருந்த காலக்கட்டத்தை 'வலி மிகுந்த நாட்கள்' என அவர் பின்னர் குறிப்பிட்டார்.
சென்னை கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காரணம் என்ன?
சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தன. உயிரொளிர்தல் என்ற நிகழ்வால் கடல் அலைகள் நீல நிறத்தில் இவ்வாறாக மாறுகின்றன.இது சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, இவை ஏன் ஏற்பட்டன? காரணம் என்ன? என்பதைப் பார்ப்போம்.
விரிவாகப் படிக்க: சென்னை கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காரணம் என்ன?
ஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.
டிரம்ப் - நரேந்திர மோதி தொலைபேசி உரையாடல்
பிராந்திய விவகாரம் பற்றியும், இரு தரப்பு விவகாரம் பற்றியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
டிவிட்டரில் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் இதுபற்றிப் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, உரையாடல் இதமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்?
'இந்தி திணிப்பு' என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விரிவாகப் படிக்க:தமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்? #BBCTamilExclusive
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்