போலாந்து குகையில் சிக்கிய இருவர் - மீட்புப் பணிகள் தீவிரம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Reuters
போலாந்தில் வெள்ளம் சூழ்ந்த குறுகிய குகையில் சிக்கிய இருவரை மீட்க, மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். வெள்ளத்தால் குகையின் நுழைவாயில் தண்ணீரால் நிரம்பியுள்ளதால், அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
தத்ரா மலைப்பகுதியில் உள்ள மிக நீளமான மற்றும் ஆழமான குகை என்று அறியப்படும் வீல்கா ஸ்னீசா குகையில்தான் இருவரும் சிக்கியுள்ளனர்.
அவர்கள் அக்குகையின் எந்தப் பகுதியில் இருக்கிறார்கள் என்று இன்னும் கண்டறிய முடியவில்லை என்பதால் கவலை நீடிக்கிறது.

குகைக்குள் செல்ல ஒரு வழியை ஏற்படுத்த, வெடிபொருட்களை பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது" - மலேசியப் பிரதமர் மகாதீர்

பட மூலாதாரம், Getty Images
ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்துப் பேசியது தவறு என்று மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் மலேசியாவில் இஸ்லாம் குறித்துப் பேசவும் போதிக்கவும் ஜாகிருக்கு எந்தத் தடையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
இனவாத அரசியல் குறித்துப் பேசுவது மலேசியாவில் நிலவும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இனவாத அரசியலை தொட்டதன் மூலம் ஜாகிர் எல்லை மீறிப் பேசிவிட்டதாக கூறியுள்ளார்.

கோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது.
கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் கூட்டத்திலேயே அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11ஆம் தேதி பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவித்திருந்தது.
இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே, கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன.

ஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்?

பட மூலாதாரம், Reuters
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூட்டாட்சி தத்துவத்தின் பாதுகாவலனாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வார். இந்திய மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் தருபவராக தன்னை காட்டிக் கொள்வார்.
ஆனால், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இந்திய கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் செயலாக பலரால் பார்க்கப்படுகிறது.
இந்தியக் கூட்டாட்சியில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களைவிட அதிகாரம் மிகவும் குறைவு.
இதனை, "டெல்லியின் கட்டுபாட்டில் இயங்கும் மிகை அதிகாரம் கொண்ட நகராட்சிகள்" என்று வர்ணிக்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் சுமந்திரா போஸ்.

இலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்

உடல்நலம் குன்றி, மெலிந்துபோன வயதான பெண் யானை ஒன்றை பௌத்த உற்சவத்தில் பங்கேற்க வைத்தது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதை நேர்த்திக்கடன் செலுத்தவே உற்சவத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், இனிவரும் காலங்களில் அதை உற்சவங்களில் பங்கேற்க வைப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் யானை உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது போல் இந்த யானை உற்சவத்தில் 10 தினங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படவில்லை என்று அதன் உரிமையாளர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு உற்சவத்தில் கலந்துக்கொண்ட 'டிக்கிரி" என்ற பெயரை கொண்ட யானை குறித்து சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
டிக்கிரி என்றழைக்கப்படும் இந்த பெண் யானைக்கு சுமார் 70 வயது என கூறப்படுகின்றது.
மேலும் படிக்க: உடல் மெலிந்த யானையும், உற்சவத்தில் ஊர்வலமும் - பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












