You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மியா கலிஃபா பேட்டி: "ஆபாசப்படங்களில் நடித்தபோதும் எனக்கு சரிசம ஊதியம் கிடைக்கவில்லை"
அனுபவமில்லாத இளம் பெண்களை குறிவைத்தே ஆபாச பட நிறுவனங்கள் இயங்குவதாகவும், ஆபாச படங்களில் நான் நடித்ததால் நான் கோடிகளில் சம்பாதிக்கவில்லை என்றும் ஆபாசப்பட துறையின் முன்னாள் நடிகை மியா கலிஃபா ஒரு நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
26 வயதாகும் மியா கலிஃபா லெபனானில் பிறந்தார். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர் 2014 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் ஆபாசப்பட துறையில் நடிகையானார்.
ஆபாசப்பட துறையில் வெறும் மூன்று மாதங்களே நடிகையாக இருந்த நிலையில் 2015ல் அவர் அதிலிருந்து வெளியேறினார். ஆனாலும், ஆபாசப்பட தளமான போர்ன்ஹப்பில் முன்னணி நடிகைகளில் அவரும் ஒருவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவருடைய தோழி மேகன் அபாட்டுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ஆபாசப்பட துறையை பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
"குறைந்த சம்பளத்தில் நடித்து கொடுத்தேன்"
ஆபாசப்பட துறையில் மியா கலிஃபாவின் காணொளிகள் மிகவும் பிரபலமானவை. எல்லா காலத்திலும் அதிகம் பார்க்கப்பட்ட ஆபாசப்பட நட்சத்திரங்களில் மியாவும் ஒருவர்.
ஆனால், தான் முன்னணி பிரபலமாக இருந்தாலும் ஊதியம் என்று வரும்போது, தனக்கு சரிசமமான ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார் மியா.
தான் படங்களில் நடித்தபோது வெறும் 12,000 டாலர்களே நிறுவனங்கள் வழங்கியதாகவும், அதன் பிறகு தனது காணொளிகள் பிரபலமான பிறகும்கூட ஒரு ரூபாய்கூட தனக்கு தரவில்லை என்றும் அந்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
இணையத்தில் தனது பெயரில் இன்னும்கூட பக்கங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டும் மியா, அவ்வாறான இணையதளங்கள் தனக்கு சொந்தமானவை அல்ல என்றும், அதிலிருந்து தனக்கு எவ்வித லாபமும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பெயரில் இயங்கும் இணையதளங்கள் வேறு பெயர்களில் இயங்கினாலே போதும் என்கிறார் மியா கலிஃபா.
"வேலைத் தர மறுக்கும் தனியார் நிறுவனங்கள்"
லெபானானில் பிறந்த மியா கலிஃபா விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுக்கவே மிகவும் விரும்பினார். தான் ஆபாசப்பட துறையை தேர்ந்தெடுத்தது தனக்கு மிகவும் கடினமான முடிவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
"என்னுடைய கடந்த காலங்களில், தனியார் நிறுவனங்கள் எனக்கு வேலை வழங்க மறுத்தன. அப்போதெல்லாம் நான் மிகவும் மனதளவில் காயமடைந்தேன். ஆனால், அதே சமயம் என்னுடைய வாழ்க்கைத் துணை போன்ற ஒருநபர் எனக்கு கிடைத்திருக்க மாட்டார் என்பதையும் நான் நினைத்து பார்க்கிறேன்," என்றார் அவர்.
இந்தாண்டு தொடக்கத்தில், ராபர்ட் சாண்ட்பெர்க் உடன் மியா கலிஃபா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
"நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா?"
மியா கலிஃபாவின் ஆபாசப்பட கால வாழ்க்கை மிகக் குறுகிய காலமே என்றாலும், சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. ஹிஜாப் ஒன்றை அணிந்துகொண்டு அவர் பாலுறவில் ஈடுபடும் காட்சி பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அதுபற்றி நேர்காணலில் விவரித்த மியா,"அந்த காணொளி பதிவேற்றப்பட்டவுடன், காட்டுத்தீயாக பரவத் தொடங்கியது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து உயிருக்கு அச்சுருத்தல்களும் வந்தன. என்னுடைய குடியிருப்பை கூகுள் மேப்பில் குறிப்பிட்டு வந்ததால், நான் வீட்டை காலி செய்துவிட்டு இரண்டு வாரங்கள் விடுதி ஒன்றில் தங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்," என்றார் அவர்.
மியா கலிஃபாவை இன்ஸ்டாகிராமில் 17 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அடிக்கடி அவரை கேலி செய்து நிறைய பதிவுகள் வரும் என்றாலும் மியா அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.
"சின்ன சின்ன விஷயங்களை நான் கண்டு கொள்வது கிடையாது. அது என்னை காயப்படுத்தவும் செய்யாது. கிண்டல் செய்கிறீர்களா செய்துகொள்ளுங்கள். ஆனால், நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? என்னை கொல்லப்போகிறீர்களா? இல்லையே அப்புறம் என்ன," என்கிறார் கூலாக.
2014 ஆம் ஆண்டு மியாமி கடற்கரையில் இருந்தபோது, தனது முதல் ஆபாசப்படத்தில் நடித்தார் மியா கலிஃபா.
ஆனால், அதே ஆண்டு இறுதியில் போர்ன்ஹப் தளத்தின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தார்.
"நான் இன்னும் என்னுடைய கடந்த காலங்களிலிருந்து மீளவில்லை," என்கிறார் மியா கலிஃபா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்