You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரள வெள்ளம்: ஒன்றாக விளையாடி, தூங்கி, நிலச்சரிவில் ஒன்றாக மடிந்த சிறுமிகள்
- எழுதியவர், தீப்தி பத்தினி
- பதவி, பிபிசி - மலப்புரத்துலிருந்து
கடந்த வியாழக்கிழமையன்று, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கவலப்பரா எனும் கிராமத்திலுள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அதற்கு கீழே இருந்த இருபது வீடுகள் அடியோடு மண்ணில் புதைந்து விட்டன.
"குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதையும், தூங்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்களை யாராலும் பிரித்துவிட முடியாத அளவுக்கு சேர்ந்திருந்தனர். அவர்கள் நிலச்சரிவிலிருந்து சடலமாக மீட்கப்படும்போதும் இணைந்தே இருந்தனர். எனவே, அவர்களை ஒன்றாகவே சேர்த்து புதைப்பதற்கு அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்" என்று அலீனா, அனகா எனும் சிறுமிகளின் குடும்பத்து நண்பரான ஷிஜு மாத்யூ பிபிசியிடம் கூறினார்.
மலப்புரத்திலுள்ள கவலப்பரா கிராமம் அடியோடு பாதிக்கப்பட்டதில் முறையே எட்டு மற்றும் நான்கு வயதான இந்த ஒன்றுவிட்ட சகோதரிகளும் உயிரிழந்தனர்.
ஆகஸ்டு 8ஆம் தேதி ஏற்பட்ட இந்த நிலச்சரிவின்போது முதப்பங்குன்னு எனும் மலையின் ஒருபகுதி அப்படியே கிராமத்தின் மீது விழுந்தது.
உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்கள் தங்களது ஐந்து குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். சரிந்து விழுந்த மலையின் உச்சிக்கு அருகில் இவர்களது வீடு அமைந்திருந்தது.
"நிலச்சரிவு ஏற்படுவதை பார்த்த அலீனாவின் தந்தை விக்டர் மற்றும் வீட்டிலிருந்த இன்னும் இருவர், ஐந்தில் மூன்று குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டனர். ஆனால், அலீனா மற்றும் அனகாவை அவர்களது காப்பாற்றமுடியவில்லை" என்று கூறுகிறார் அதே பகுதியை சேர்ந்த ஷிஜு மாத்யூ.
நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த கிராமத்தை பிற கிராமங்களுடன் இணைக்கும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மீட்புதவிப் பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டது.
நிலச்சரிவு நடந்த சில மணிநேரங்களுக்கு பிறகு, இந்த சிறுமிகளை தேடுவதற்கான சிலரது உதவியுடன் விக்டர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முயற்சித்தாலும், அங்கு நிலவிய அபாயகரமான சூழ்நிலையின் காரணமாக அவர்களால் வீட்டை நெருங்க கூட முடியவில்லை.
சம்பவம் நடந்த அடுத்த தினம், அதாவது வெள்ளிக்கிழமையன்று, தீவிர தேடுதலுக்கு பிறகு அனகா மீட்கப்பட்டவுடனேயே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அனகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்கிடைப்பட்ட நேரத்தில், அலீனா நிலச்சரிவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கவலப்பர்ரா கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புதவி பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் கரீம், "திங்கட்கிழமை மட்டும் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 30க்கும் மேற்பட்டோர் புதையுண்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். கடந்த ஓரிரு நாட்களாக மழையின் வீரியம் குறைவாக உள்ளதால், மீட்புதவி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுமார் 40 அடி உயரத்துக்கு குவிந்துள்ள சகதியை சுத்தப்படுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த மீட்புதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனது சொந்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதம் குறித்து அறிந்த சௌதி அரேபியாவில் வசித்து வரும் அஷ்ரப், உடனடியாக கடன் பெற்று இங்கு வந்துள்ளார்.
நிலச்சரிவுக்கு முன்னர் தனது வீடு இருந்த இடத்துக்கு சென்ற அவர், குறைந்தபட்சம் தமது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதை நிறைவாக உணர்வதாக கூறுகிறார்.
"நிலச்சரிவு ஏற்பட்ட உடனேயே எனது மனைவி மற்றும் மகனின் அலைபேசிக்கு முயற்சித்தேன்; ஆனால், அவர்களை மட்டுமல்ல, எனது கிராமத்திலுள்ள எவரையுமே தொடர்புக்கொள்ள முடியவில்லை. அதீத அச்சத்தின் காரணமாக என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. எனினும், எனது நண்பர்களிடம் கடன் பெற்றுக் கொண்டு சௌதி அரேபியாவிலிருந்து ஊருக்கு வந்துவிட்டேன்" என்று அஷ்ரப் கூறுகிறார்.
கடந்த சனிக்கிழமை வந்திறங்கியதும், எனது கிராமத்தை சுற்றியுள்ள நிவாரண முகாம்களில் எனது குடும்பத்தினரை தேடி அலைந்தேன். பிறகு, உறவினர் ஒருவரது வீட்டில் எனது குடும்பத்தினர் பத்திரமாக இருப்பதாக ஒருவர் என்னிடம் கூறினார். அவர்களை நேரில் சென்று பார்த்த பின்னர்தான் எனக்கு உயிரே திரும்ப வந்தது.
பிறகு, எனது கிராமத்திற்கு நேரில் சென்று, அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பார்வையிட்டேன். எங்களது வீடு அமைந்திருந்த மொத்த இடமும் மண்ணில் புதையுண்டு கிடந்ததை எண்ணி நான் அதிர்ந்துவிட்டேன். எனக்கு தெரிந்த பலர் நிலச்சரிவில் புதையுண்டு இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கேரளா முழுவதும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 86 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதே போன்று, மலப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பகுதிகளிலும் உணவுப் பொட்டலங்களை விமானப்படை வீரர்கள் விநியோகித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்