You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் சயனைடு வெடி வைத்து விலங்குகளைக் கொல்ல அனுமதி மற்றும் பிற செய்திகள்
அமெரிக்காவில் காடுகளில் வாழும் அபாயகரமான ஓநாய்கள், நரிகள் மற்றும் நாய்களை "சயனைடு வெடிகள்" பயன்படுத்தி கொல்லும் தற்போதைய நடைமுறையை தொடர அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க அரசு இந்த விவகாரத்தில் காட்டு விலங்குகளுக்கு எதிராக முடிவெடுக்க கூடாது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த முறையில், கொல்வதற்கு தீர்மானிக்கப்பட்ட விலங்குகள் பொறி வைத்து, ஏமாற்றி கூண்டிற்குள் பிடித்து, வாய்ப்பகுதியில் நஞ்சு தெளிக்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றன.
இதில் பிரச்சனை என்னவென்றால், விவசாயிகள் மற்றும் காடுவாழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உலை வைக்கும் விலங்குகளை பிடித்து நஞ்சை தெளித்து கொல்வதற்காக வைக்கப்படும் பொறிகளில் சில சமயங்களில் அபாயகரமற்ற விலங்குகளும், குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
உதாரணமாக, விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறி ஒன்றில் 2017இல் சிக்கிக் கொண்ட குழந்தை ஒன்றுக்கு தற்காலிக பார்வை இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், அமெரிக்க அரசு குழந்தையின் பெற்றோருக்கு 1,50,000 டாலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்க அரசின் சேவை பிரிவுகளால் மட்டுமே பதிக்கப்படும் இதுபோன்ற பொறிகளில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கான காட்டு விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.
காஷ்மீர் விவகாரம்: பெரியாரும் அண்ணாவும் சொன்னது என்ன?
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை நீக்குவதற்கான மசோதாக்களை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. இதனை ஆதரிக்க, தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான பெரியாரும் சி.என். அண்ணாதுரையும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக என்ன கருதினார்கள்?
இந்த வாரத் துவக்கத்தில் காஷ்மீர் விவகாரம் பற்றியெரியத் துவங்கியபோது, காஷ்மீர் குறித்து பெரியார் கூறியதாக சில வாக்கியங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன.
விரிவாக படிக்க:காஷ்மீர் விவகாரம்: பெரியாரும் அண்ணாவும் சொன்னது என்ன?
கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு தேசிய விருது; சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தௌஹித் ஜமாத்தின் சொத்துகள் இலங்கையில் முடக்கம்
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்திய தேசிய தௌஹித் ஜமாத்தின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இதன்படி, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஹசீம் உள்ளிட்ட அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 13 கோடி ரூபாய் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாஜக எம்.எல்.ஏ. மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கருக்கு எதிராக போக்சோ (POCSO) மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய டெல்லி அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆணையிட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம், 2012 என்பதுதான் சுருக்கமாக போக்சோ சட்டம் என்று அழைக்கப்படுகிறது. குல்தீப் சிங் சேங்கர் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டியுள்ள பெண் சம்பவம் நடந்தபோது மேஜர் வயது அடையாதவர் என்பதால் இந்த சட்டம் இந்த வழக்கில் பிரயோகிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்