விமானத்தில் உறங்குபவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்காகதான் மற்றும் பிற செய்திகள்

விமானத்தில் உறக்கம்

விமானத்தில் அனைவரும் உறங்குவது வழக்கம்தானே? அதுபோலதான் அந்த பெண்ணும் உறங்கி இருக்கிறார். விமானம் தரை இறங்கிய பின்னும் அவர் எழவில்லை. அவரை யாரும் எழுப்பவும் இல்லை. விமானப் பணி ஊழியர்கள் உட்பட, விமானத்திலிருந்து அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர், விமானிகளும் சென்றுவிட்டனர்.

ஆனால், அப்போதும் இவர் எழவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் இவர் எழுந்து பார்த்த போது இவர் அதிர்ந்து போய்விட்டார்.

எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. கைபேசியிலும் போதுமான அளவுக்கு சார்ஜ் இல்லை. இப்படியான சூழலில் அவர் தன் தோழிக்கு அழைத்து தன் நிலையை சொல்லி இருக்கிறார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கைபேசியில் சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருக்கிறது. பின், அந்த பெண்ணின் தோழி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லி இருக்கிறார். இதற்கு மத்தியில் அந்த பெண், விமான காக்பிட்டுக்கு சென்று அங்கு இருந்த டார்ச்சை எடுத்து ஒளி ஏற்படுத்தி இருக்கிறார். இதனை வெளியே இருந்து பார்த்த ஊழியர் அந்த பெண்ணை மீட்டு இருக்கிறார். இந்த சம்பவமானது க்யூபக்கிலிருந்து, டொரண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி நடந்திருக்கிறது. அந்நிறுவனம் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

'இரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல்'

இரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது

இந்தத் தாக்குதல் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணிணி அமைப்புகள் மீது நடத்தப்பட்டன என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியது மற்றும் எண்ணெய் டாங்கர்களை தாக்கியது ஆகியவற்றிற்கு பதில் நடவடிக்கை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

'இலங்கையில் நல்லாட்சி வர அரசமைப்பில் மாற்றங்கள் வேண்டும்'

இலங்கை அரசியலமைப்பின் 18ஆம் மற்றும் 19ஆம் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்திற்கு நான்கரை வருடங்கள் நிறைவடைந்துள்ள பின்னணியில், எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கான தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நடிகர் சங்கத் தேர்தல்: பாண்டவர் அணி Vs சுவாமி சங்கரதாஸ் அணி - என்ன நடக்கிறது?

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும் ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

தமிழ்த் திரையுலக நடிகர்களின் சங்கமான தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றுவருகிறது. காலை ஏழு மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறுமெனக் கூறப்பட்ட நிலையில், சற்றுத் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

'நடத்தை விதிகளை மீறியதால் விராட் கோலிக்கு அபராதம்'

சனிக்கிழமையன்று சவுத்ஹாம்டனில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வீரர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எல்பிடபல்யூ வழங்குவது தொடர்பாக நடுவராக இருந்த அலீம் தர்ரை நோக்கி ஆக்ரோஷமாக வந்த தவறுக்காக விராட் கோலிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் அவருக்கு கிடைக்கும் தொகையில் 25சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :