You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடாவில் குடியேற்றம்: பத்து லட்சம் பேரை குடியேற்றும்படி கனடா பிற நாடுகளை வேண்டுகிறதா? #BBCRealityCheck
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி நியூஸ்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 லட்சம் குடியேறிகளை தன் நாட்டில் குடியேறச் செய்ய பிற நாடுகளிடம் கேட்டு கொண்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
நைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, கானா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து இந்த குடியேறிகள் எதிர்பார்க்கப்படுவதாக இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தெரிவிக்கும் கட்டுரைகள் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த செய்திகளில் உண்மை இல்லை.
இந்த கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் செய்தி என்ன?
நைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, கானா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை இலக்கு வைத்து பரவி வரும் இந்த கட்டுரைகள், கனடா தன்னுடைய புதிய குடியேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பத்து லட்சம் மக்களை கனடாவில் குடியேற அழைப்புவிடுப்பதாக தெரிவிக்கின்றன.
"பத்து லட்சம் குடியேறிகளை கனடாவுக்கு அனுப்ப ஜாம்பியா அதிபரிடம் கனடா பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்" என்ற தலைப்பில் ஓர் இணையதளம் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதிலுள்ள புகைப்படத்தில், ஜாம்பியா அதிபர் கனடாவின் தங்கள் நாட்டுக்கான தூதர் பமிலா ஒடோன்நெலுடன் கைக்குலுக்குவது உண்மையான புகைப்படமே. ஆனால், கட்டுரையின் தலைப்பு முற்றிலும் தவறானது.
கனடிய அரசின் குடிவரவு அலுவலகமான 'கனடிய அகதிகள் மற்றும் குடிமக்களின் குடிவரவு அலுவலகம்' இத்தகைய திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பத்து லட்சம் குடியேறிகளை அனுப்ப கனடா அழைப்புவிடுத்துள்ளது என்று தெரிவித்து இதே போன்ற தலைப்புகளுடன் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி பரவியது எப்படி?
இந்த செய்திகள் அனைத்தும் தவறானவை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கனடா குடிவரவு கொள்கையை பின்னணியாக வைத்து இவை எழுதப்பட்டுள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் குடியேறிகளை கனடிய அரசு ஈர்ப்பதற்கு திட்டமிடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை எந்த தனிப்பட்ட நாட்டு மக்களையும் குறிப்பிட்டு வெளியிடப்படவில்லை.
நைஜீரியாவில் இந்த செய்தியின் முதல் பதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது. ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான முறை இது பகிரப்பட்டுள்ளது.
பத்து லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்வோரை கொண்டுள்ள தனிப்பட்ட சமூக ஊடக பக்கங்கள் இந்த செய்தியை பரப்ப தொடங்கின.
இந்த பதிவுக்கு கலவையான பதில்களும் கிடைத்தன. சிலர் இது சரியானதல்ல என்று இனம் கண்டும், மேலும் பலர் கனடாவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கும் இணைப்புகளை வழங்கக்கோரியும் கேள்விகளும் கேட்டிருந்தனர்.
இதே செய்தி ரெட்டிட், பல்வேறு வலைப்பூக்கள் மற்றும் பல ஃபேஸ்புக் குழுக்களாலும் பதிவிடப்பட்டன.
கனடாவின் பதில் என்ன?
இந்த செய்திகள் மறுக்கப்பட்டுள்ளன.
நைஜீரியா மற்றும் கென்யாவிலுள்ள கனடிய தூதரகங்கள் இந்த செய்திகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்று அந்தந்த நாட்டு மக்களை எச்சரித்துள்ளன.
"இத்தகைய இணைப்பை உங்களது சமூக ஊடக வலைதள பக்கத்தில் பார்த்தால் ஏமாந்துவிட வேண்டாம். இந்த செய்தி உண்மையல்ல" என்று நைஜீரிய தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
கனடாவுக்கு செல்ல விரும்புகிற நைஜீரிய மக்களை இலக்கு வைத்து பரப்பப்படும் தவறான தகவல் இது மட்டுமல்ல.
கனடாவில் குடியேறுவதற்கு விசா விண்ணப்பங்களை வெற்றிகரமாக முடித்து கொடுப்பதாக உத்தரவாதம் அளிக்கும் குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று வலியுறுத்தி நைஜீரியாவிலுள்ள கனடிய அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
கனடிய அகதிகள் மற்றும் குடிமக்களின் குடிவரவு அலுவலகம் வழக்கமாக ஆன்லைனில் பரவிவரும் தகவல்களை சோதனை செய்து வருவதாக இந்த அலுவலக அதிகாரி ஒருவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியை மையமாக வைத்து போலித் தகவல்கள் பரவி வருகிறபோது, உண்மைகளை வழங்குவதற்கு நாங்கள் மிக விரைவாக செயல்பட்டு வருகிறோம்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
உண்மையான நிலவரம் என்ன?
1990ம் ஆண்டு முதல் 60 லட்சத்திற்கு மேலான குடியேறிகள் கனடாவில் குடியேறியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் இவ்வாறு குடியேறுவோரின் விகிதம் உயர்ந்து வருகின்றது.
2017 அக்டோபர் தொடங்கி 2018 ஜூன் மாதம் வரை, கனடா குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது 130 சதவீதம் அதிகரித்துள்ளது.
கனடாவில் குடியேறும் மக்களின் 10 நாடுகளின் பட்டியலில் நைஜீரியாவும், பிலிப்பைன்சும் முன்னிலை பெறுகின்றன.
கனடாவில் பிற நாட்டு மக்களை குடியேற செய்து, தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் நிலவிவரும் முதியோர் அதிகரிப்பு பிரச்சனை மற்றும் குறையும் பிறப்பு விகித பிரச்சனையை சமாளிக்க கனடா எண்ணுகிறது.
மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் குடியேறிகளை கனடாவில் குடியேற்றும் திட்டத்தின் மூலம், 2019ம் ஆண்டு 3 லட்சத்து 800 குடியேறிகள், 2020ம் ஆண்டு 3 லட்சத்து 41 ஆயிரம் பேர், 2021ம் ஆண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் பேரை குடியேற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிதாக குடியேற்றப்படுவோர் கனடாவின் மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீதமாக இருப்பர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்