குறைப்பிரசவத்தில் பிறந்த உலகிலேயே எடை குறைவான குழந்தையின் இன்றைய நிலை தெரியுமா?

பட மூலாதாரம், AFP
உலகின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை என்று நம்பப்படும் குழந்தை ஒன்று, அமெரிக்க மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளது. குறைப்பிரசவத்தில் பிறந்தபோது இக்குழந்தையின் எடை 245 கிராம் மட்டுமே.
23 வாரங்கள் மூன்று நாட்கள் கருவாக இருந்தபோது, 2018ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்த இக்குழந்தை ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் எடையை கொண்டிருந்தது. அதன் பெயர் சேபி.
உயிருக்கு போராடி வந்த அக்குழந்தை கலிஃபோர்னியாவில் உள்ள ஷார்ப் மேரி பர்ச் மருத்துவமைனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தது.
சில மணி நேரங்கள் மட்டுமே சேபி உயிரோடு இருப்பாள் என்று அக்குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவர்கள் அப்போது தெரிவித்தனர்.
ஆனால் ஐந்து மாதங்களுக்கு பிறகு, 2.5 கிலோ எடையுடன் நல்ல உடல் நலத்துடன் அக்குழந்தை வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது சேபியை கவனித்து வந்த செவிலியர், அக்குழந்தை உயிர் பிழைத்தது ஓர் 'அதிசயம்' என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், AFP
உலகின் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பதிவேட்டில் சேபியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக 2015ஆம் ஆண்டு ஜெர்மனியில் 252 கிராம் எடையில் ஜெர்மனியில் பிறந்த குழந்தைதான் உலகின் சிறிய குழந்தை பதிவில் இடம்பெற்றது.
ப்ரி-எக்லம்ப்சியா என்ற கர்ப்பகால சிக்கல் ஏற்பட்டதால், கொடுக்கப்பட்ட தேதிக்கு மூன்று மாதத்திற்கு முன்னதாகவே சேபியின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
ப்ரி-எக்லம்ப்சியா என்பது உயர் ரத்த அழுத்த நிலையை சார்ந்த கர்ப்பகால சிக்கலாகும். இதனால் தாய் சேய் இருவருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
இது தொடர்பான காணொளி ஒன்றை மருத்துவமனை வெளியிட்டது. அதில் பேசியிருக்கும் சேபியின் தாய், தான் பிரசவித்த நாள் "வாழ்க்கையின் அச்சம் மிகுந்த நாள்" என்று கூறியிருந்தார்.
"என் குழந்தை உயிர் பிழைக்காது என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். நான் பிரசவித்தபோது அவள் கருவாகி வெறும் 23 வாரங்கள்தான் ஆகியிருந்தன" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர் தெரிவித்திருந்தார்.
"பொதுவாக குழந்தைகள் 37ல் இருந்து 42 வாரங்களில்தான் பிறக்கும். சேபி பிறக்கும்போது அவரது தாய் கருவாகி 23 வாரங்களே ஆகியிருந்தன. பிறக்கும்போது சேபி உள்ளங்கை அளவுதான் இருந்தாள்" என்று மருத்துவமனை கூறியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












