உயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா? மற்றும் பிற செய்திகள்

உயரும் கடல் மட்டம்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா?

முன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என கூறப்பட்டது. ஆனால், இதனைவிட இரண்டு மடங்கு உயருமென இப்போது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் பறிபோகும். அதாவது லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் மூழ்கும்.

இதன் விளைவாக லட்சகணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழப்பார்கள். லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும். மக்கள் வசிப்பதற்கு லாயக்கற்ற நாடாக வங்கதேசம் மாறும்.

போர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் - அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அத்துடன் இரான் மொத்தமாக அழிந்துவிடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்."இரானுக்கு போர் வேண்டுமென்றால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்" என அதிபர் டிரம்ப் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து இரானை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் ட்வீட் செய்துள்ளார்.சமீபத்தில் வளைகுடா பகுதியில் கூடுதல் போர்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியது.

தோப்பு வெங்கடாச்சலம்: கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் அதிமுக எம்.எல்.ஏ.

அதிமுகவில் தாம் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் இன்று திங்கள்கிழமை மாலை சந்தித்த அவர், முதல்வரிடம் தாம் அளித்துள்ள தனது ராஜினாமா கடிதத்தின் மீது முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கவில்லை என்றும் ஒரு வாரத்திற்கு முன்பே ராஜினாமா குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார் .

ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன?

ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும்.ஹுவாவேவின் புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் ஹுவாவேயின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் ஆண் - திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து திருமண பதிவு சான்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு 31.10.2018 அன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :