You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வின்சென்ட் லேம்பெர்ட்: குடும்பத்தினரின் மாறுபட்ட கருத்துக்களால் கருணை கொலை தாமதம் மற்றும் பிற செய்திகள்
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரான்சில் துன்பங்களில் இருந்து விடுபட, கருணை கொலை செய்வதற்கு தகுந்தவர் என்ற வகையில் நாட்டில் விவாதப்பொருளாக இருந்த ஒரு நபருக்கு வழங்கப்படும் சிகிச்சை இந்த வாரம் நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
வின்சென்ட் லேம்பெர்ட் என்ற அந்த 42 வயதான நபர் கடந்த 2008 இல் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தினால் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் தொடர்வது குறித்து லேம்பர்ட் குடும்பத்தினர் இடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
லேம்பர்டுக்கு பொருத்தப்பட்ட முக்கிய உணவு மற்றும் சுவாச குழாய்களை திரும்பப் பெற அவரது மனைவி விரும்புகிறார். அதேவேளையில் அவரது பெற்றோர் லேம்பர்ட் தொடர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
லேம்பர்ட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள உயிர் காப்பு கருவிகள் நீக்கப்பட்டு அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம் என்று ஒரு பிரெஞ்சு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஐரோப்பாவின் உயர்மட்ட நீதிமன்றம் உறுதி செய்தது.
எனினும், வின்சென்ட் லாம்பெர்ட்டின் தந்தை அவர் கடத்திச் செல்லப்படலாம் என்று தெரிவித்த அச்சத்தின் காரணமாக அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் முயற்சியை மருத்துவர்கள் நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், தற்போது ஒரு புதிய மருத்துவ குழு கருணை கொலை தொடர்பாக மேலும் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அவரை கருணை கொலை செய்யக்கூடாது என்று முன்னர் செய்யப்பட்ட சில முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது இது குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் விவாதங்கள் அதிகரித்துள்ளன.
ஆச்சர்யங்கள் நிறைந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
இந்திய மக்களவைத் தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கான நேரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், தேர்லுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இவை அனைத்தும் பிற நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளே. பிபிசி தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்துவதில்லை.
இந்திய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பாஜகவுக்கு சாதகமாக உள்ளதாகவே குறிப்பிடுகின்றன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு பாஜக கூட்டணிக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 இடங்களும், பிற கட்சிகளுக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.
பாஜக கூட்டணி 306 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 104 இடங்கள் பெறும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
பாஜக கூட்டணி 242 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 164 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 136 இடங்கள் பெறும் என நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
தமிழகத்தில் திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களிலும், அதிமுக அதிகபட்சம் நான்கு தொகுதிகளிலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்தது.
புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் வசமாகும் என்று இந்தக் கருத்துக்கணிப்பு தெரிவித்தது.
இது குறித்து மேலும் படிக்க:பாஜகவுக்கு சாதகமான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
இலங்கையில் சைபர் தாக்குதலால் முடங்கிய இணையதளங்கள்
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களின் இணையதளங்கள் உள்ளிட்ட பல இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் ஒருங்கிணைப்பு மையம் தெரிவிக்கின்றது.
சைபர் தாக்குதல் நடத்தப்பட்டள்ள சில இணையதளங்கள் செயற்பாடுகள் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், பல இணையதளங்கள் வழமை போன்று செயற்பட்டு வருவதாகவும் இலங்கை கணனி அவசர தயார் ஒருங்கிணைப்பு மையத்தின் கணனி தகவல் பொறியிலாளர் என்.தீனதயாளன் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது உரிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பல தனியார் இணையதளங்களையும் இலக்கு வைத்த இந்த தாக்குத் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த இணையதளங்களில் காணப்படுகின்ற குறைப்பாடுகளின் ஊடாகவே இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாக என்.தீனதயாளன் தெரிவிக்கின்றார்.
முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்துபோராடும் ஜெயவனிதா
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளான பெரும்பாலான தமிழர்கள், அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட வரலாறு இன்றும் மறக்க முடியாத நினைவுகளாகவே இருக்கின்றன.
அதிலும், அருணாசலம், ஆனந்தகுமாரசிறி, இராமநாதன், பூந்தோட்டம் உள்ளிட்ட பல முகாம்கள், முள்வேலிகளினால் அமைக்கப்பட்ட முகாம்களாகவே காணப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டபோது, ஒரு தொகுதி கூடாரங்கள் முள்வேலிகளால் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த முள்வேலி முகாம்களுக்கு முழுமையாக இலங்கை ராணுவம் பாதுகாப்பு வழங்கியதுடன், அந்த கூடாரங்களில் வாழ்ந்த மக்கள் முள்வேலிகளை கடந்து வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
முள்வேலிக்குள் அடைக்கப்பட்ட மக்கள் குளிப்பதையும், மல சல கூடங்களை பயன்படுத்துவதையும் ராணுவத்தினர் வழங்கிய நேரத்திலேயே செய்யவேண்டி இருந்தது என இந்த முகாகளில் இருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுவும், குளிப்பதற்கும், குடிநீரை பெற்றுக் கொள்வதற்கும், மல சல கூடங்களை பயன்படுத்துவதற்கும் சரியான முறையான வசதிகள் எதுவும் ராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு முள்வேலி முகாமில் வாழ்ந்தவர்களில் ஒருவரே காசிப்பிள்ளை ஜெயவனிதா.
இது குறித்து மேலும் படிக்க:முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்து இன்றும் போராடும் பெண்ணின் கதை
இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இலங்கை ராணுவப் படைகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி வரை சுமார் 26 ஆண்டுகள் உள்நாட்டுப் போர் நடைபெற்றது.
குறிப்பாக, போர் முடிவடைந்ததாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்ட மே 18ஆம் தேதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்ததாக பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையில் உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் படிக்க:இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்