முன் சக்கரங்கள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கி பயணிகளைக் காப்பாற்றிய விமானி

காணொளிக் குறிப்பு, விமானத்தின் மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே நகர்ந்தது.

விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாததால், முன் சக்கரங்கள் இல்லாமலேயே மியான்மர் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர் தாம் இயக்கிய விமானத்தைத் தரை இறக்கினார்.

மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் மாண்டலே விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நிற்கும் முன் அதன் முன் அடிப்பகுதி ஓடுதளத்தில் உரசியது.

அந்த எம்ரேர் 190 ரக விமானத்தில் இருந்த 89 பயணிகளுக்கும் காயம் எதுவும் ஏற்படாமல் சாமர்த்தியமாக விமானத்தை இறக்கியதற்காக பாராட்டப்பட்டு வருகிறார் கேப்டன் மியாட் மோ ஆங்.

லேண்டிங் கியர் வெளியே வந்து விட்டதா என்பதை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் உறுதி செய்வதற்காக கேப்டன் மியாட் மோ ஆங், அந்த விமான நிலையத்தைச் சுற்றி இரு முறை வானில் வட்டமடித்ததாக மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

யங்கூனில் இருந்து மாண்டலே வந்த அந்த விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக, தரை இறங்கும் முன்னர், வேகமாக எரிபொருளைப் பயன்படுத்தித் தீர்க்கும் அவசரகால வழிமுறையைக் கேப்டன் மியாட் பின்பற்றினார்.

விமானம்

பட மூலாதாரம், Reuters

விமானத்தின் மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே நகர்ந்தபின், அந்த விமானம் நின்றதை அப்போது எடுக்கப்பட்ட காணொளி காட்டுகிறது.

இது ஒரே வாரத்தில் மியான்மரில் நடக்கும் இரண்டாவது விமானப் போக்குவரத்துக் கோளாறாகும்.

புதனன்று பிமான் பங்களாதேஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து சறுக்கி விலகியதால் 17 பயணிகள் காயமடைந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :