You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவுக்கு ஆதரவான சட்டத்திருத்தம்: ஹாங்காங் பிராந்திய நாடாளுமன்றத்தில் கைகலப்பு
குற்ற விசாரணைக்கு உள்படுத்தப்படுவோரை சீனாவுக்கு அனுப்பிவைத்து விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிகளின்போது ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கைகலப்பு நடந்தது.
இன்று, சனிக்கிழமை, நடந்த இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் காயமடைந்தனர். கேரி ஃபேன் எனும் உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேசைகள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏறியும், எதிர்த்தரப்பினரை கடுமையாகப் பேசியும் அவைத்தலைவரின் ஒலிவாங்கியைக் கட்டுப்படுத்தவும் முயன்ற சூழலில் கைகலப்பு ஏற்பட்டது.
இந்த சட்டத்திருத்தம் ஹாங்காங் சுதந்திரமாக இயங்குவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த கைகலப்பு மூண்டது.
இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் முயற்சியாக, ஹாங்காங் ஜனநாயகத்துக்கு ஆதரவான அவைத்தலைவர் மாற்றப்பட்டு, சீனாவுக்கு ஆதரவான ஒருவர் அப்பதவிக்குக் கொண்டுவரப்பட்டார்.
1997ஆம் ஆண்டு வரை ஹாங்காங் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் சீனாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது முதல் 50 ஆண்டுகளுக்கு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகள் மட்டுமே சீனாவின் வசம் கொடுக்கப்பட்டு,'ஒரே நாடு, இரு அமைப்புமுறை' என்னும் கொள்கையின் அடிப்படையில் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரங்கள் மிக்க பிராந்தியமாக உள்ளது.
சட்டத்திருத்தம் செய்யப்படுவது எதற்கு?
ஹாங்காங் பிராந்தியத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் தைவானில் தனது தோழியுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தபோது அவரைக் கொலை செய்துவிட்டு ஹாங்காங் தப்பி வந்துவிட்டார்.
அந்த இளைஞரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தைவான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். எனினும் தைவான் உடன் தங்களுக்கு, கைதிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இல்லை என்பதால், சீனா, தைவான் மற்றும் மக்கௌ ஆகிய பகுதிகளுக்கு, வழக்குகளின் அடிப்படையில் கைதிகளை ஒப்படைக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகி கேரி லாம், சீன ஆதரவு நிலைப்பாடு உடையவர்.
இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், விசாரணைக்காக ஒப்படைக்கப்படும் ஹாங்காங் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் உரிமை, உடைமை மற்றும் உயிரைக்கூட இழக்க வாய்ப்புண்டு என்று ஹாங்காங் பன்னாட்டு வர்த்தகக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்