பவளப்பாறைகளின் பேரழிவு: மூடப்படும் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மற்றும் பிற செய்திகள்

2000ஆம் ஆண்டு வெளிவந்த 'தி பீச்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலுள்ள 'பி பி லே' எனும் தீவிலுள்ள 'மாயா பே' கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த கடற்கரை கடந்தாண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

மூடப்படுவதற்கு முன்புவரை இந்த கடற்கரையில் நாள் முழுவதும் 5,000 சுற்றுலாப் பயணிகள் இருக்கும் நிலை காணப்பட்டது. அதன் காரணமாக அந்த கடற்கரை பகுதியில் காணப்பட்ட அரிய வகை பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகி வருவதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்த கடற்கரை பகுதியின் வாழ்க்கைச்சூழல் மென்மேலும் மேம்பாடடையும் பொருட்டு இந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?

நாட்டின் தலைநகரான கொழும்புவிலிருந்து சுமார் 330 கி.மீ. தூரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காத்தான்குடி. சுமார் 2.56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்த நகரம் தெற்காசியப் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. காத்தான்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்து மொத்தமாக சுமார் 66 ஆயிரம் இஸ்லாமியர்கள் இங்கு வசிக்கிறார்கள்.

இலங்கைத் தீவின் எல்லா நகரங்களிலும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் கடைகளையோ, வர்த்தக நிறுவனங்களையோ பார்க்க முடியும். "காக்காய் இல்லாத இடமும் இல்லை; காத்தான்குடிக்காரர்கள் இல்லாத ஊரும் இல்லை" என்ற பழமொழியே இந்தப் பகுதியில் உண்டு. அந்த அளவுக்கு இந்த நகரம் கடுமையான உழைப்பாளிகளும் வர்த்தகர்களும் நிறைந்த நகரம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி - பின்னணி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது.

மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது உடன் இறந்த ஒருவரது மகனான எஸ்.அப்பாஸ் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா என்பதை வியாழக்கிழமை பரிசீலித்தது.

தமிழகத்தில் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது ஏன்?

தமிழ்நாட்டில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், பல்வேறு வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் பதிவாயின. இதையடுத்து திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் 10 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இது தவிர, வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பாக மாதிரி வாக்குப் பதிவு நடத்தும்போது பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டதால் மேலும் 46 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமா என கேட்டு தமிழகத் தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது.

ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம் - மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்பதால், அவர் தேர்தலில் போட்டியிடவும், மக்களவைக்குத் தேர்வு செய்யப்படவும் தடை விதிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.

ஏதோ ஒரு பிரிட்டன் நிறுவனத்தின் ஆவணங்களில் அவர் பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் பிரிட்டன் குடிமகன் ஆகிவிடுவாரா என்று கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜெய் பகவான் கோயல் என்பவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது என்று பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் தெரிவிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :