You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிமுடி சூடினார் தாய்லாந்தின் புதிய அரசர் வஜ்ராலங்கோர்ன்
அரசராக மணிமுடி சூடுவதற்கான சடங்குகள் மூன்று நாட்கள் நடைபெற தொடங்கிய முதல் நாளில், தாய்லாந்து அரசராக மகா வஜ்ரலாங்கோர்ன் மணிமுடி சூட்டப்பட்டுள்ளார்.
நீண்டகாலம் ஆட்சி செய்த தந்தை பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், 66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.
சில நாட்களுக்கு முன்னால், தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவர் ஜெனரல் சுதிடா வஜ்ராலங்கோர்ன் நா அயூடியாவை அரச குடும்பத்தில் சேர்த்து திருமணம் செய்து கொண்ட வஜ்ராலங்கோர்ன் தாய்லாந்தின் அரசியாக சுதிடா விளங்குவார் என்று அறிவித்தார்.
தாய்லாந்து அரசமைப்பு சட்ட முடியாட்சியை கொண்டிருந்தாலும், அரச குடும்பத்திற்கு தாய்லாந்து மக்கள் அதிக மதிப்பு அளிக்கின்றனர். அரச குடும்பத்திற்கு கணிசமான அதிகாரமும் உள்ளது.
"லெசி மெஜஸ்டே" என்று அழைக்கப்படும் மன்னராட்சியை விமர்சிக்க தடை விதிக்கும் கடுமையான சட்டங்களை தாய்லாந்து கொண்டுள்ளது.
பொது மக்களின் பார்வையில் இருந்தும், கண்காணிப்பதில் இருந்தும் அரச குடும்பத்தை இந்த சட்டங்கள் பாதுகாக்கின்றன.
மணிமுடி சூடுதல்
சனிக்கிழமை நடைபெற்ற மணிமுடி சூட்டும் சடங்கின்போது, 66 வயதான அரசருக்கு வழங்கப்பட்ட 7.3 கிலோகிராம் எடையுடைய "வெற்றியின் மகா மணிமுடியை" வஜ்ராலங்கோர்ன் தலையில் வைத்துகொண்டார்.
பின்னர், வஜ்ராலங்கோர்ன் தனது முதலாவது அரச உரையை ஆற்றினார். அதில், 69 ஆண்டுகளுக்கு முன்னால், மணிமுடி ஏற்றபோது அவரது தந்தை செய்ததுபோல, நீதி, நியாயத்தோடு ஆட்சி நடத்துவதாக வாக்குறுதி அளித்தார்.
அரசியல் ஸ்திரமில்லாத தருணத்தில் அரசருக்கு மணிமுடி சூட்டுகின்ற நிகழ்வு தாய்லாந்தில் நடைபெறுகிறது.
2014ம் ஆண்டு தாய்லாந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் முதல் முறையாக பொதுத் தேர்தல் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடைபெற்றது. ஆனால், புதிய அரசு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
யார் இந்த வஜ்ராலங்கோர்ன்?
அரசர் வஜ்ராலங்கோர்ன், அரசர் பூமிபோன் அடூன்யடேட் மற்றும் அரசி சிரிகிட்டின் இரண்டாவது குழந்தையும், முதலாவது மகனுமாவார்.
பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்ற இவர், கான்பெராவிலுள்ள ராயல் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்றவர். தாய்லாந்து படைப்பிரிவுகளில் அலுவலராக பதவியேற்ற இவர், பயணியர் மற்றும் போர் விமானங்களை ஓட்டுகின்ற விமானியும் ஆவார்.
பட்டத்து இளவரசரும், மணிமுடிக்குரிய அடுத்த வாரிசுமாக 1972ம் ஆண்டு இவர் உருவானார். இப்போது இவர் பத்தாம் ராமா அல்லது சாக்கிரி வம்சத்தின் 10வது அரசர் என்று அறியப்படுகிறார்,
தாய்லாந்து அரசி
கடந்த புதன்கிழமை இரவு தாய்லாந்து தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பப்பட்ட திருமண சடங்கு காணொளிகள், அரசு குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் மற்றும் அரண்மனை ஆலோசர்கள் இதில் பங்கேற்றதை காட்டின.
சுதிடா அரசி மீது அரசர் புனித நீரை ஊற்றுவதும், இந்த தம்பதியர் திருமண பதிவேட்டில் கையெழுத்திடுவதும் ஒளிபரப்பானது.
2014ம் ஆண்டு தாய்லாந்து ஏர்வேஸின் முன்னாள் விமானப் பணியாளரான சுதிடா டிட்ஜேயை, தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவராக வஜ்ராலங்கோர்ன் நியமித்தார்.
இதற்கு முன்னால் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ள வஜ்ராலங்கோர்னுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன.
சுமார் 70 ஆண்டுகளான தாய்லாந்தை ஆட்சி செய்த முன்னாள் அரசர் பூமிபோன் அடூன்யடேட், உலகிலேயே அதிக ஆண்டுகள் அரசராக ஆட்சி செய்த பெருமையை பெற்று 2016ம் ஆண்டு காலமானார்.
தாய்லாந்து மன்னர் பூமிபோன் இறுதிச்சடங்கின் கடைசி நிகழ்வு
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்